ஜப்பான் மற்றும் தென் கொரிய கடற்பிராந்தியத்தில் சந்தேகத்திற்கிடமான இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வட கொரியா நேற்று சோதனை நடத்தியுள்ளது. இதனை ஜப்பான், தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் ஒரு பெரிய அரசியல் மாநாட்டிற்கு முன்பாக இந்த ஆயுத சோதனை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அமெரிக்காவின் பென்டகன் மூன்றாம் நிலை அதிகாரியான கொள்கைக்கான பாதுகாப்பு பிரதிச் செயலாளர் எல்பிரிட்ஜ் கோல்பி தென் கொரிய தலைநகர் சியோலுக்கு உயர்மட்ட விஜயம் செய்த ஒரு நாளுக்குப் பிறகு இச்சோதனை நடத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சியோல் நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் கிழக்கு கடல் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளதாக, தென் கொரிய இராணுவ உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்டறிந்ததாகவும், அவை ஏற்கனவே கடலில் விழுந்திருக்கக் கூடும் எனவும் ஜப்பானின் கடலோரக் காவல்படை அறிவித்துள்ளது.
இச்சோதனையானது துல்லியமான தாக்குதல் திறன்களை மேம்படுத்துதல் மட்டுமின்றி அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு சவால் விடும் நோக்கில் அமைந்துள்ளதாவும், ஆயுதங்கள் அனைத்தும் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முன்பு இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
