அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான பாதுகாப்பு மற்றும் இரு நாட்டு உறவுகளில் புதிய பதற்றம் உருவாகியுள்ளது.
கனடாவுக்கான அமெரிக்க தூதுவர் பீட் ஹூக்ஸ்ட்ரா, “கனடா F-35 போர் விமானங்களை வாங்க மறுத்தால், அமெரிக்கா தனது போர் விமானங்களை கனடாவின் வான்வெளியில் இயக்க வேண்டிய நிலை ஏற்படும்” என்று கூறியதை தொடர்ந்து இந்த பதற்றம் உருவாகியுள்ளது.
கனடா 2023-இல் 88 F-35 விமானங்களை வாங்க 19 பில்லியன் டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இதில் 16 விமானங்களுக்கு பணம் செலுத்தப்பட்டு, 2026-இல் வழங்கப்படவிருந்தது. ஆனால், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த வரி அச்சுறுத்தல்களுக்கு பின்னர், கனடா இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளது.
இதனால், கனடா 72 Gripen E போர் விமானங்கள் மற்றும் 6 GlobalEye கண்காணிப்பு விமானங்களை ஸ்வீடனின் Saab நிறுவனத்திலிருந்து வாங்கும் வாய்ப்பையும் ஆராயவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“F-35 விமானங்கள் NORAD (North American Aerospace Defence Command) அமைப்பில் முழுமையாக இணக்கமாக செயல்படுகின்றன. Gripen விமானங்கள் அதே அளவிலான திறனை வழங்காது. கனடா F-35-ஐ தவிர்த்தால், NORAD அமைப்பை மாற்ற வேண்டிய நிலை வரும்” என ஹூக்ஸ்ட்ரா கூறியுள்ளார்.
NORAD, 1957-இல் தொடங்கப்பட்ட அமெரிக்கா-கனடா கூட்டு பாதுகாப்பு அமைப்பு. இது வட அமெரிக்காவின் வான்வெளி மற்றும் கடல் பாதுகாப்பை கண்காணிக்கிறது. கனடா தனது பங்கு குறைத்தால், அமெரிக்கா தனியாக அந்த இடைவெளியை நிரப்ப வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
இந்த நிலை, இரு நாடுகளின் பாதுகாப்பு கூட்டாண்மை மற்றும் வர்த்தக உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
