உக்ரேனின் வடகிழக்கு கார்கிவ் (Kharkiv) பிராந்தியத்தில் 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த ரயில் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 05 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள யாசிகோவ் (Yazykove) கிராமத்திற்கு அருகில் செவ்வாய்க்கிழமை (ஜன 27) இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மூன்று ‘ஜெரான்-2’ ரக தற்கொலைப்படை ட்ரோன்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன. இதில் ஒரு டிரோன் ரயில் பெட்டி ஒன்றின் மீது நேரடியாக மோதி வெடித்ததில் தீப்பற்றியது. மற்றைய இரு ட்ரோன்களும் ரயிலுக்கு அருகில் விழுந்து வெடித்துள்ளன.
தாக்குதலுக்குள்ளான பெட்டியில் 18 பயணிகள் இருந்தனர். உயிரிழந்த 05 பேரின் சடலங்கள் டிஎன்ஏ (DNA) பரிசோதனை மூலம் அடையாளம் காணப்படவுள்ளன.
இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, “எந்தவொரு நாட்டிலும், பொதுமக்கள் பயணித்த ரயில் மீதான இத்தகைய தாக்குதல் பயங்கரவாதம் என்றே கருதப்படும். பொதுமக்கள் பயணம் செய்யும் ரயில் பெட்டிகள் மீது தாக்குதல் நடத்த எந்தவித இராணுவ நியாயமும் இருக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் (Abu Dhabi) உக்ரேன் – ரஷ்யா இடையே நேரடி அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமான முறையில் நடைபெற்று வரும் சூழலில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இத்தகைய தாக்குதல்கள் இராஜதந்திர முயற்சிகளைப் பலவீனப்படுத்துவதாக ஜெலென்ஸ்கி கவலை வெளியிட்டுள்ளார்.
