News

கியூபாவுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகள் மீது வரிகளை விதிப்பதாக ட்ரம்ப் மிரட்டல்

 

கம்யூனிச நாடான கியூபாவுக்கு மசகு எண்ணெய் வழங்கும் நாடுகள் மீது கடும் வரிகளை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (ஜன 29) மிரட்டல் விடுத்துள்ளார்.

இதன் மூலம் கியூபா மீதான தனது பொருளாதார அழுத்தத்தை அவர் உச்சகட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.

கியூபா அரசாங்கத்தை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு “அச்சுறுத்தல்” என குறிப்பிட்ட ட்ரம்ப், தேசிய அவசரநிலை பிரகடனத்தின் கீழ் இந்த நிறைவேற்று ஆணையில் கையெழுத்திட்டுள்ளார்.

கியூபாவுக்கு மசகு எண்ணெய் அல்லது பெற்றோலியப் பொருட்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வழங்கும் எந்தவொரு நாட்டின் மீதும் மேலதிக வரிகளை விதிக்க இந்த ஆணை வழிவகை செய்கிறது.

இந்த உத்தரவில் குறிப்பிட்ட வரி விகிதங்களோ அல்லது நாடுகளின் பெயர்களோ இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், மெக்சிகோ மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் இதன் மூலம் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 03 ஆம் திகதி அமெரிக்க இராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ சிறைப்பிடிக்கப்பட்டார்.

வெனிசுவேலா தான் கியூபாவுக்கு நீண்டகாலமாக எண்ணெய் வழங்கி வந்தது. தற்போது மதுரோவின் வீழ்ச்சிக்குப் பின்னர், கியூபாவுக்கான எண்ணெய் விநியோகம் முற்றிலும் நின்றுபோயுள்ளது.

“கியூபா விரைவில் வீழ்ச்சியடையும். வெனிசுவேலாவிலிருந்து இனி ஒரு சொட்டு எண்ணெய்யோ அல்லது ஒரு டொலர் பணமோ கியூபாவுக்குப் போகாது” என ட்ரம்ப் இந்த வார ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top