News

அரச வாரிசுரிமையிலிருந்து அண்ட்ரூ நீக்கம்: பிரித்தானிய அரசு அதிரடித் திட்டம்

பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரை (Andrew Mountbatten-Windsor), அரச வாரிசுரிமை வரிசையில் இருந்து நீக்குவதற்கான சட்டத்தைக் கொண்டுவர பிரித்தானிய அரசு பரிசீலித்து வருகிறது.

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் இருந்த தொடர்பு மற்றும் பொது அலுவலகத்தில் முறைகேடாக நடந்துகொண்டதாக எழுந்த முறைப்பாடு காரணமாக அண்ட்ரூ சமீபத்தில் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

அவர் குற்றமற்றவர் எனத் தொடர்ந்து கூறி வந்தாலும், அவர் ஒருபோதும் மன்னராகும் வாய்ப்பு இருப்பதை தடுக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

இது குறித்துப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் லூக் பொல்லார்ட், பொலிஸாரின் விசாரணை முடிவுகள் எப்படியிருந்தாலும், அண்ட்ரூவை வாரிசுரிமையிலிருந்து நீக்குவதே சரியான நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார்.

தற்போது மன்னர் சார்லஸின் சகோதரரான அண்ட்ரூ, வாரிசுரிமை வரிசையில் எட்டாவது இடத்தில் உள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் அவரது “இளவரசர்” உள்ளிட்ட அனைத்து அரசப் பட்டங்களும் பறிக்கப்பட்ட நிலையிலும், வாரிசுரிமைச் சட்டப்படி அவர் இன்னும் மன்னராகும் தகுதியைப் பெற்றுள்ளார்.

இதனை மாற்றியமைக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும்.

இந்தச் சட்டத்திற்கு மன்னரின் ஒப்புதல் மட்டுமின்றி, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட 14 காமன்வெல்த் நாடுகளின் ஆதரவும் தேவைப்படும்.

வாரிசுரிமைச் சட்டத்தில் இத்தகைய மாற்றம் கடைசியாக 1936-ஆம் ஆண்டு எட்டாம் எட்வர்ட் மன்னர் பதவி விலகியபோது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அண்ட்ரூ வசிக்கும் விண்ட்சர் பகுதியில் உள்ள ரோயல் லொட்ஜ் இல்லத்தில் பொலிஸார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். லிபரல் டெமக்ராட்ஸ் மற்றும் எஸ்.என்.பி (SNP) போன்ற அரசியல் கட்சிகள் இந்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அரச குடும்பத்தின் புகழுக்குக் களங்கம் ஏற்படாமல் இருக்க, தனிப்பட்ட குடும்ப உறவுகளையும் அரசாங்கக் கடமைகளையும் பிரித்துப் பார்ப்பதில் மன்னர் சார்லஸ் உறுதியாக இருப்பதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், மன்னர் நோய்வாய்ப்படும்போது அவருக்குப் பதிலாகப் பணியாற்றும் ‘கவுன்சிலர் ஆஃப் ஸ்டேட்’ என்ற பொறுப்பிலிருந்தும் அண்ட்ரூ நிரந்தரமாக நீக்கப்படுவார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top