News

ஜப்பான் வான்பரப்பில் வடகொரிய ஏவுகணை: அவசரநிலை பிரகடனம்

வடகொரியா இன்று சந்தேகத்திற்குரிய பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றினை ஏவியுள்ளதாக ஜப்பான் அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜப்பான் பிரதமரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அண்மையில் நாட்டின் முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்ற சனே தகைச்சி, உடனடியாக அவசரநிலைப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தி ஏவுகணையின் பாதையைத் தீர்மானிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜப்பானிய நேரப்படி மதியம் 1.30 மணியளவில் இந்த ஏவுகணை ஏவப்பட்டதாகக் கடற்படை தெரிவித்துள்ள நிலையில், கடலில் இருந்த கப்பல்கள் அனைத்தும் உடனடியாகக் கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இந்த ஏவுகணை ஜப்பானின் சிறப்பு பொருளாதார எல்லைக்கு வெளியே விழுந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், ஜப்பான் பிரதேசத்திற்கு உடனடி ஆபத்து எதுவும் இல்லையென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், வடகொரியாவின் இந்தத் தொடர்ச்சியான இராணுவச் சோதனைகள் பிராந்தியப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக ஜப்பான் செய்தி நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து நடத்தும் வருடாந்த கூட்டு இராணுவப் பயிற்சிகளுக்குப் பதிலடியாகவே வடகொரியா இந்தச் சோதனையை முன்னெடுத்துள்ளதாகக் கருதப்படுகின்றது.

இந்தச் சம்பவம் குறித்து ஜப்பானிய பிரதமர் அலுவலகத்தில் அவசரக்குழுக் கூட்டங்கள் நடைபெற்று வருவதுடன், சேத விபரங்கள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக மதிப்பீடு செய்து வருகின்றனர்.

இவ்வாறான சோதனைகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே வடகொரியாவினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முன்னதாக, கடந்த ஜனவரி 27 அன்றும் வடகொரியா இதேபோன்ற பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி ஜப்பானிய கடற்பரப்பில் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top