பிரம்டனில் அமைந்துள்ள தமிழின அழிப்பு நினைவகம் மீண்டும் ஒருமுறை விசமிகளால் சிதைக்கப்பட்டிருக்கும் செயலுக்கு ஒன்ராறியோ மாநில அமைச்சரும், ஸ்காபரோ—ரூஜ் பார்க் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கௌரவ விஜய் தணிகாசலம் அவர்கள் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
கனடியத் தமிழ் சமூகத்தின் உணர்வுகளுடன் கலந்த இந்த நினைவகம் சேதப்படுத்தப்பட்டிருப்பது ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து அமைச்சர் விஜய் தணிகாசலம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
“பிரம்டனில் அமைந்துள்ள தமிழின அழிப்பு நினைவகம் சிதைக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த அருவருப்பையும் மனவேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானோரை நினைவுகூரும் ஒரு புனிதமான இடமாகவும், கனடாவைப் புலம்பெயர் தேசமாகக் கொண்ட தமிழின அழிப்பிலிருந்து தப்பிப்பிழைத்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் ஆற்றுப்படுத்துதலுக்குரிய ஓர் அடிப்படை அடையாளமாகவும் இந்நினைவகம் திகழ்கிறது.

ஒன்ராறியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில், தெற்காசியாவிற்கு வெளியே மிகப் பெரிய அளவில் துடிப்புடனும் மீளெழும் திறனுடனும் வாழும் தமிழ்ச் சமூகத்தை நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். எனது தொகுதி மக்களுக்கும், ஒன்ராறியோ முழுவதும் வாழும் இலட்சக்கணக்கான தமிழர்களுக்கும், நடைபெற்றுள்ள இவ்வருவெருக்கத் தக்க செயலானது கனடியத் தமிழ் சமூகத்தின் அடையாளம் மற்றும் வரலாற்றின் மீதான நேரடித் தாக்குதலாகும். வெறுப்புணர்வுக்கும், இனவழிப்பு மறுப்புக்கும் ஒன்ராறியோவில் இடமில்லை. தமிழ் வரலாற்றைப் பாதுகாப்பதிலும், தமது உறவுகளை நினைவுகூருவதற்கும் துயரைப் பகிர்வதற்குமான தமிழ் மக்களின் பிரிக்க முடியாத உரிமையை மதிப்பளிப்பதிலும் நாங்கள் என்றும் உறுதியாக நிற்போம்” என்றார்.
அமைச்சரின் இந்நிலைப்பாட்டைத் தொடர்ந்து, கனடியத் தமிழர் தேசிய அவை போன்ற அமைப்புகளும் இந்த வன்முறைச் செயலைக் கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இச்சிதைப்பு நடவடிக்கை என்பது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல எனவும், இது தமிழின அழிப்பை மறுக்கும் ஒரு திட்டமிட்ட செயற்பாடு எனவும் கனடியத் தமிழர் தேசிய அவை சுட்டிக்காட்டியுள்ளது. இச்சம்பவம் குறித்து பீல் பிராந்திய பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி, கண்காணிப்பு கருவியின் ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் அவ்மைப்பு வலியுறுத்தியுள்ளது.
