சம்பந்தப்பட்ட நபர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கனடாவின் ஒன்ராறியோ மாகாண சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபரின் அண்மைய பயண வரலாற்றைக் கருத்தில் கொண்டு, “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக”, மருத்துவ நெறிமுறைகளின்படி எபோலா உள்ளிட்ட பலவிதமான தொற்று நோய்கள் அவருக்கு ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்து மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர்.
மேலும், மருத்துவமனையில் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு வழிமுறைகளும் தகுந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஒன்ராறியோ மாகாணத்தில் இதுவரை யாருக்கும் எபோலா தொற்று உறுதி செய்யப்படவில்லை என சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
அந்த நபர் எப்போது கனடாவுக்குத் திரும்பினார் அல்லது அவருக்கு என்ன வகையான அறிகுறிகள் காணப்படுகின்றன என்பது குறித்த விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடுகளான கொங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) மற்றும் உகண்டா ஆகிய நாடுகளில் அண்மையில் பரவத் தொடங்கியுள்ள எபோலா வைரஸ் தொற்றினால் இதுவரை குறைந்தது 139 பேர் உயிரிழந்துள்ளதுடன், 600க்கும் மேற்பட்டோர் இந்நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
