கிழக்கு இந்தோனேசியாவில் மிகவும் தீவிரமாகி வரும் ‘லெவோடோபி லாகி-லாகி’ எரிமலை, இன்று வெள்ளிக்கிழமை (05) பலமுறை வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் வான்பரப்பில் பிரம்மாண்டமான சாம்பல் கோபுரங்கள் உருவாகியதை அடுத்து, அப்பகுதியிலுள்ள உள்ளூர் விமான நிலையம் ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
புளோரஸ் தீவில் அமைந்துள்ள இந்த எரிமலை, இன்றையதினம் முற்பகல் 11:15 மணியளவில் சக்திவாய்ந்த முறையில் வெடித்ததோடு இதன்போது எரிமலைக் குழம்பின் எச்சங்கள் மற்றும் சாம்பல் வான்நோக்கி சுமார் 2.5 கிலோமீட்டர் (2.5km) உயரத்திற்குச் சீறிப்பாய்ந்ததாக அந்நாட்டு எரிமலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து எரிமலை வெடிப்பின் காரணமாக, அதிலிருந்து மேற்கே 60 கி.மீ தொலைவிலுள்ள ‘மௌமேரே’ நகரின் உள்ளூர் விமான நிலையச் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதனால் 5 உள்நாட்டு விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி பார்தஹியன் பஞ்சைதான் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த எரிமலைக்கான ஆபத்து எச்சரிக்கை இரண்டாவது மிக உயர்ந்த மட்டத்தில் பேணப்படுவதுடன், எரிமலை வாயைச் சுற்றியுள்ள 5 கி.மீ பகுதிக்குள் மக்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பலத்த மழை பெய்தால் ஆறுகள் வழியாக ‘லாகர்’ எனப்படும் அபாயகரமான எரிமலைக் குழம்பு வெள்ளம் பாயக்கூடும் என்பதால், ஆற்றங்கரை வாழ் மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
பசிபிக் நெருப்பு வளையத்தில் இந்தோனேசியா அமைந்துள்ளதால், இங்கு அடிக்கடி நிலநடுக்கங்களும் எரிமலை வெடிப்புகளும் ஏற்படுவது வழமையாகும். கடந்த ஜூலை மாதமும் இந்த எரிமலை 18 கி.மீ உயரத்திற்குச் சாம்பலை உமிழ்ந்ததால் பாலி சர்வதேச விமான நிலையத்தின் 24 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
