உக்ரைன் தயாரிப்பான ‘FP-5 ஃபிளமிங்கோ’ என்ற அதிநவீன குரூஸ் ஏவுகணை, ரஷ்ய எல்லைக்குள் சுமார் 900 கிலோமீட்டர் ஆழத்தில் ஊடுருவிச் சென்று, அங்குள்ள முக்கிய இராணுவத் தொழிற்சாலை ஒன்றைத் துல்லியமாகத் தாக்கியுள்ளது.
இது தொடர்பான காணொளி காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளன.
ரஷ்யாவின் செபோக்சாரி நகரில் அமைந்துள்ள இந்த இராணுவத் தொழிற்சாலையின் மீது உக்ரைன் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதை உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.
ரஷ்ய இராணுவம் உக்ரைனுக்கு எதிராகப் பயன்படுத்தி வரும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களுக்குத் தேவையான முக்கிய உதிரிபாகங்களை இந்த ஆலையே தயாரித்து வழங்கி வந்ததாக ஜனாதிபதி ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் வான் பாதுகாப்பு வளையங்களை மீறி, 900 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை உக்ரைன் நாட்டின் சொந்த தயாரிப்பு ஏவுகணை வெற்றிகரமாகத் தாக்கியுள்ளது, இந்த இரு நாட்டுப் போரில் உக்ரைனின் இராணுவத் தொழில்நுட்ப வளர்ச்சியைக் காட்டுவதாக சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
