நீச்சல் குளத்தில் நடத்தப்பட்ட சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய ரோபோக்களை ஒரே நேரத்தில் இயக்கி, அதிக எண்ணிக்கையிலான தன்னாட்சி தானியங்கி ட்ரோன்களை இயக்கியதற்கான உலக சாதனையை சீன குழு ஒன்று படைத்துள்ளது
ஷியான் தியான்ஹே மேரிடைம் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து வடமேற்கு பாலிடெக்னிகல் பல்கலைக்கழகக் குழுவால் ஒரே நேரத்தில் இயக்கப்படும் மிக அதிகமான தன்னாட்சி ட்ரோன்களை இயக்கி உலக கின்னஸ் சாதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.
வடமேற்கு பாலிடெக்னிகல் பல்கலைக்கழகம் TH-618 என அழைக்கப்படும் 116 தன்னாட்சி ட்ரோன்களின் இந்த சோதனை ஆகஸ்ட் 29 அன்று நடைபெற்றது என செப்டம்பர் 24 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கின்னஸ் உலக சாதனை அதிகாரிகளின் மேற்பார்வையில் 50 மீட்டர் (164 அடிகள்) நீளமும் 20 மீட்டர் (65 அடிகள்) அகலமும் கொண்ட நீச்சல் குளத்தில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.. கின்னஸ் அமைப்பினர் இந்த சாதனையை உறுதிப்படுத்தி தங்களது இணையதளத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
தன்னாட்சி ட்ரோன்கள் வரிசையாக இயக்கப்பட்டு, மனித தலையீடு ஏதுமின்றி 500 மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு 34 நிமிடங்களுக்கு தன்னாட்சி முறையில் நீருக்கடியில் அணிவகுத்து பயணித்தன. அவை தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பாதையைப் பின்பற்ற நிகழ்நேரத் தரவைச் (real-time data) சார்ந்து இயங்கியுள்ளன.
சோதனையில் பயன்படுத்தப்பட்ட TH-618 வாகனங்கள் 61.5 செ.மீ (24.2 அங்குலம்) நீளமும் 20 செ.மீ (7.8 அங்குலம்) அகலமும் கொண்டவை என்று வடமேற்கு பாலிடெக்னிகல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்த ட்ரோன்கள் 5.14 கிலோ (11.33 பவுண்டுகள்) எடையுள்ளவை, அதிகபட்சமாக 30 கி.மீ (18.6 மைல்கள்) வரை செல்லக்கூடியவை மற்றும் தொடர்ச்சியாக எட்டு மணி நேரத்திற்கும் மேலாக இயங்கக்கூடியவை என்று அது கூறியுள்ளது.
வடமேற்கு பாலிடெக்னிகல் பல்கலைக்கழகமானது நிகழ்நேரத் தொடர்புகளின் சிரமம் மற்றும் சுற்றுச்சூழல் சவால்கள் உட்பட நீருக்கடி வழிசெலுத்தலின் சிக்கல்களையும் இதன் வாயிலாக சுட்டிக்காட்டியுள்ளது எனலாம்
நீருக்கடி இலக்குகளை உணர்தல், தகவல் உணர்தல், ஒலித் தொடர்பு மற்றும் காட்சிப் பார்வை ஆகியவற்றில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான ஆராய்ச்சியின் மூலம் இந்த சாதனை சாத்தியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவான கடல் தள வரைபடம் தயாரித்தல் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய் ஆய்வு போன்ற ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள் உட்பட, பல நீரியல்சார் செயற்பாடுகளிற்கு தன்னாட்சி ட்ரோன்கள் உருவாக்கப்பட்டதன் மூலம் அவை மேலும் பல பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்ளாமல், தங்களுக்குள் பரஸ்பரம் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு குழுவாகச் செயல்படும் இந்தத் தொழில்நுட்பம், கடல்சார் ரோபாட்க்ஸ் துறையில் மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
