News

ஜப்பானியர்களை ஏமாற்றி கோடிகளில் மோசடி: சர்வதேச சைபர் கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது!

 

ஜப்பான் நாட்டு குடிமக்களைக் குறிவைத்து கணினி கணக்குகளை முடக்கி பணம் பறித்து வந்த சர்வதேச சைபர் குற்ற கும்பலை சேர்ந்த ஐந்து பேரை உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலி மாவட்ட காவல்துறை கைது செய்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் முகல்சராய் பகுதியிலுள்ள கைலாஷ்புரி என்ற இடத்தில் இயங்கி வந்த சட்டவிரோத கால் சென்டரை காவல்துறை சோதனையிட்டது. இந்தச் சோதனையின் போது, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரௌனக் சிங் (32), ரோஷன் குமார் (21), அமன் குமார் (23), விகாஸ் வைபவ் (25) மற்றும் அங்கீத் குமார் (25) ஆகிய ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்கள் பீகாரில் உள்ள நாலந்தா மற்றும் கயா பகுதிகளில் வைத்து ஜப்பனீஸ் மொழியைக் கற்றுக்கொண்டுள்ளனர்.

ஜப்பான் நாட்டில் உள்ள முதியவர்கள் மற்றும் கணிசமான வங்கிச் சேமிப்பு வைத்துள்ள நபர்களை இலக்காகக் கொண்டு இவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். ‘

பாதிக்கப்பட்ட நபர்களை ஒரு குறிப்பிட்ட வலைத்தளத்திற்குச் சென்று ஆறு இலக்க பின் எண்ணை உள்ளிடுமாறு மோசடி கும்பல் கோரியுள்ளது. இந்த எண்ணைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களின் கணினியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, ஆன்லைன் பேங்கிங் மூலமாக பணத்தைப் பிற கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர். வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்கள் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் மெய்நிகர் எண்களை பயன்படுத்தி பகிரப்பட்டுள்ளன.

இந்த மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட போலி வங்கித் கணக்குகளை சீனாவைச் சேர்ந்த கும்பல் ஒன்று வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. அத்துடன் கைப்பற்றப்பட்ட ஜப்பானியப் பணத்தை ஹவாலா மூலம் இந்திய ரூபாயாக மாற்றுவதற்குத் தலைமைச் சூத்திரதாரி ஒருவன் செயல்பட்டுள்ளான். காவல் துறையின் சோதனையின் போது இந்தத் தலைவன் தப்பி ஓடிவிட்டான்.

இவர்கள் முகவரி ஆதாரங்களை மறைக்க வாரணாசி முகவரிகளைக் கொண்டு போலி ஆதார் அட்டைகளை உருவாக்கியுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்ட ரௌனக் சிங் என்பவரின் கணக்கிலிருந்த ரூ.9 லட்சம் பணத்தை காவல்துறையினர் முடக்கியுள்ளனர். தப்பியோடிய முதன்மை குற்றவாளியை பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top