தென் அமெரிக்க மற்றும் மத்திய அமெரிக்க பிராந்தியங்களை உலுக்கும் வகையில், பனாமா நாட்டில் 7.7 ரிக்டர் அளவிலான அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வகத்தின் (USGS) கூற்றுப்படி, இலங்கை நேரப்படி நேற்று (9) இரவு பனாமா நகரத்திலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் , 12.6 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது.
இதுவரை 80க்கும் மேற்பட்ட தொடர் அதிர்வுகள் (aftershocks) பதிவாகியுள்ளதுடன், பீதியடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பிற்காக வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதனால் மத்திய அமெரிக்காவின் பசுபிக் கடற்கரைப் பகுதிகள் மற்றும் கொலம்பியா, ஈக்வடோர் ஆகிய நாடுகளுக்கு நிலநடுக்கம் காரணமாக சுனாமி அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
பனாமா நகரத்திற்கு தென்மேற்கே அமைந்துள்ள பெனொனோம் நகரத்திலுள்ள ஹோட்டல் ஒன்றின் பகுதி இடிந்து விழுந்தது உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
எனினும், தெய்வாதீனமாக இதுவரை உயிரிழப்புகளோ அல்லது பலத்த காயங்களோ பதிவாகவில்லை என்பதுடன் அந்நாட்டின் 6 மாகாணங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் வெனிசுலா மற்றும் கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களுடன் ஒப்பிடும்போது, இந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதற்கு முதன்மை காரணம், அப்பகுதியில் 43,000 என்ற குறைந்தளவிலான மக்களே வசித்து வந்தமையாகும்.
