News

நிலத்தடியில் பிரமாண்ட ஏவுகணை தளம்: வீடியோ வடிவில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான பதற்றம் அதிகரித்து வரும் பின்னணியில், ஈரான் தனது புதிய நிலத்தடி ஏவுகணை மையத்தை (Underground Missile Facility) அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது.

ஈரானிய அரச ஊடகம் தனது எக்ஸ் தள பக்கத்தில் இது தொடர்பில் காணொளி வெளியிட்டுள்ளது.

குறித்த பதிவில், ஈரானிய ஆயுதப்படைகளின் தலைமை அதிகாரி அலி அப்தொல்லாஹி மற்றும் புரட்சிகரக் காவல் படையின் (IRGC) விண்வெளிப் பிரிவுத் தளபதி மஜித் மூசவி ஆகியோர், ஏவுகணைகள் மற்றும் இராணுவ வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள நிலத்தடி வளாகத்தைப் பார்வையிடுவதைக் காணமுடிகிறது.

எதிரி நாடுகளின் வான்வழித் தாக்குதல்களிலிருந்து ஏவுகணைகளைப் பாதுகாக்கவும், போர்ச் சூழலிலும் உற்பத்தியைத் தடையின்றித் தொடரவுமே இத்தகைய நிலத்தடி மையங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

 

இந்த விஜயத்தின் போது அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த அலி அப்தொல்லாஹி, ஈரானின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால், தங்களின் பதிலடி மத்திய கிழக்கு பிராந்தியத்தையும் தாண்டி விரிவடையும் எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் சேதமடைந்த ஏவுகணை தளங்களை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், ஈரானின் இராணுவ வலிமை மற்றும் ஏவுகணை வலையமைப்பு இன்னும் வலுவாகவே உள்ளது என்பதை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையிலேயே இந்த புதிய காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top