அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் தெளிவில்லாதகாரணத்தினாலேயே பௌத்த தேரர்கள் இன்று வீதிகளில் இறங்கியுள்ளனர் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நாடு அதல பாதாளத்தில் இருந்து மீண்டெழ வேண்டுமெனில் அதிகாரப்பகிர்வு மிகவும் அவசியமானது எனவும் இதன்போது கூறியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிராக பௌத்த தேரர்கள் தற்போது வீதிகளில் இறங்கியுள்ளனர்.உண்மையில் இந்தச் சட்டத்தில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் தெளிவில்லாத காரணத்தாலேயே பௌத்த தேரர்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.
நாட்டை எவரும் இனி தீவைத்துக் கொளுத்த முடியாது, நாட்டைப் பின்னகர்த்தவும் முடியாது.வீதிகளில் இறங்கியுள்ள தேரர்களுக்கு மகாநாயக்க தேரர்கள் வழிகாட்ட வேண்டும், அவர்களுக்கு உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டும்.
இது தொடர்பில் எமது சக எம்.பி. சம்பிக்க ரணவக்கவும் கவனம் செலுத்த வேண்டும். நாடு அதல பாதாளத்தில் இருந்து மீண்டெழ வேண்டுமெனில் அதிகாரப்பகிர்வு மிகவும் அவசியமானதுடன் தேவையானது.
13 ஆவது திருத்தச் சட்டம் என்பது புதியதொரு சட்டம் அல்ல. இது ரணில் கொண்டு வருகின்ற சட்டம் அல்ல, சஜித் கொண்டு வருகின்ற சட்டம் அல்ல, அநுரகுமார கொண்டு வருகின்ற சட்டம் அல்ல.
இந்தச் சட்டம் ஏற்கனவே எமது நாடாளுமன்றத்தின் அனுமதி பெறப்பட்டு நாட்டின் அரசியலமைப்பில் இருக்கின்ற சட்டமாகும். இது புதியதொரு சட்டம் அல்ல.எனவே, 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளார்.