Canada

இலங்கை மக்களின் துயர் துடைக்க ஆதரவு வழங்கும் கனடா

பொறுப்புக்கூறலை முன்னகர்த்தவும், மனித உரிமைகளை நிலைநிறுத்தவும், இலங்கைத்தீவின் மக்களுக்கு நீடித்திருக்கும் அமைதியை ஊக்குவிக்கவும் எடுக்கப்படும் சர்வதேச முயற்சிகளுக்குக் கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும் என கனடாவின் தற்போதைய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு ஓட்டாவா – ஒன்றாரியோ பிரதம அலுவலகத்தில் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்படுவதாவது,

“கனடாவிலும், உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகங்களுடன் இணைந்து நாம் இன்று தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளைக் கடைப்பிடிக்கிறோம். கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக நீடித்த இலங்கை உள்நாட்டுப் போர், ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்களைப் பறித்தது.

நாம் உயிரிழந்தவர்களின் நினைவைப் போற்றி, அளவிடற்கரிய துன்பமடைந்த தப்பிப் பிழைத்தோருக்கும், குடும்பத்தினருக்கும், சமூகங்களுக்கும் துணையாயிருப்போம்.

உலகிலுள்ள மிகப் பெரும் புலம்பெயர் தமிழ்ச் சமூகங்களில் ஒன்று கனடாவிலுள்ளது. வன்முறை, துன்புறுத்தல் ஆகியவற்றில் இருந்து தப்புவதற்குப் புகலிடம் நாடிவந்த பலரும் இதில் அடங்குகிறார்கள்.

2022 ஆம் ஆண்டில் கனேடிய நாடாளுமன்றம் மே 18 ஆம் திகதியைத் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக ஒருமனதாக அங்கீகரித்து, இலங்கையில் தமிழர்கள் மீது புரியப்பட்ட அட்டூழியங்களை இனப்படுகொலை என அங்கீகரித்தமை, துயர்படிந்த வரலாற்றை ஏற்றுக்கொள்வதன் ஒரு முக்கிய படியைப் பிரதிபலிக்கிறது.

பொறுப்புக்கூறலை முன்னகர்த்தவும், மனித உரிமைகளை நிலைநிறுத்தவும், இலங்கைத்தீவின் மக்களுக்கு நீடித்திருக்கும் அமைதியை ஊக்குவிக்கவும் எடுக்கப்படும் சர்வதேச முயற்சிகளுக்குக் கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும்.

மனித கௌரவம், நீதி ஆகியவற்றுக்கும், இத்தகைய பாரதூரமான மனித உரிமை மீறல்கள் புறக்கணிக்கப்படாமலும், மறக்கப்படாமலும் இருப்பதற்குமான எமது உறுதிப்பாட்டை நாம் மீள உறுதிசெய்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top