News

2 நாட்களில் கொட்டித் தீர்த்த 1 மாத மழை.. வெள்ளத்தில் தத்தளிக்கும் பாங்காக் – 8 பேர் உயிரிழப்பு

 

தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில், இரண்டு நாட்களில் சுமார் 320 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது, வழக்கமாக செப்டம்பர் மாதம் முழுவதும் பதிவாகும் மொத்த மழைப் பொழிவுக்கு சமமானதாகும்.

இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 80,000 பேர் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

வடிகால் அமைப்பு அடைப்பால் பல பகுதிகளில் இருந்து தண்ணீர் முழுமையாக வடிய ஒரு வாரம் வரை ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளத்தால் சுமார் 329,000 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாங்காக்கின் 50 மாவட்டங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தாய்லாந்து அரசாங்கம், வெள்ளத்தால் சிக்கித் தவிப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு வழங்கும் நோக்கில், படகுகள் மற்றும் நடமாடும் சமையலறைகளைப் பயன்படுத்தி உணவை விநியோகித்து வருகிறது.

இரண்டு நீர்த்தேக்கங்கள் அவற்றின் கொள்ளளவைத் தாண்டி நிரம்பியுள்ளதால், அருகிலுள்ள மக்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்யுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வெள்ளச் சேதத்தின் மதிப்பு 327 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தால் தாய்லாந்திற்கு குறைந்தபட்சம் 11 பில்லியன் பாட் (327 மில்லியன் டாலர்) இழப்பு ஏற்படக்கூடும். நிலைமை சீராகாவிட்டால், சேதத்தின் அளவு அதிகரிக்கக்கூடும்.

பாங்காக் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1.5 மீட்டர் உயரத்தில் மட்டுமே உள்ளது, மேலும் இது ஒரு ஆற்றின் அருகே தாழ்வான நிலப்பரப்பில் அமைத்துள்ளது. இந்த நகரத்தில் 84 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

ஆய்வுப்படி இந்த நகரம் ஒவ்வொரு ஆண்டும் சில மில்லிமீட்டர்கள் அளவுக்குக் கீழ்நோக்கிச் சரிந்து வருகிறது.

பாங்காக்கில் சுமார் ஆறு மாதங்கள் மழைக்காலம் நீடிப்பதால், கனமழையின் போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

கடந்த ஆண்டும் தாய்லாந்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு தெற்கு தாய்லாந்தில் வெறும் மூன்று நாட்களில் 630 மி.மீ மழை பெய்ததில், குறைந்தது 145 பேர் உயிரிழந்தனர்.

33,000க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. அதே நேரத்தில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய உள்கட்டமைப்புகளும் சேதமடைந்தன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top