News

தமிழர் தாயகப் பகுதிகளில் உணர்வுபூர்வமாகத் தொடரும் மாவீரர் தின நினைவேந்தல்

மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்களை கௌரவிக்கும் நிகழ்வுகள் பிரதேசங்கள் தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, கிளிநொச்சி – வன்னேரிக்குளம் வட்டாரத்தின் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் விசேட நிகழ்வு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

வன்னேரிக்குளம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோரின் தியாகங்களை நினைவுகூர்ந்து அவர்களைக் கௌரவிக்கும் முகமாக இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.இதன்போது, வருகை தந்திருந்த மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளால் மதிப்பளிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை வடக்கு பிரதேசத்தில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று(25.11.2026) முள்ளியவளை வடக்கு மக்களின் ஏற்பாட்டில் உணர்வு பூர்வமாக இடம்பெற்றுள்ளது.

இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள் மாலை அணிவிக்கப்பட்டு, மங்கள வாத்திய இசையுடன் முள்ளியவளை வடக்கு பொதுநோக்கு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டதனை தொடர்ந்து பொதுச்சுடர் மற்றும் பொது திருவுருவப்படத்திற்கான மலர் மாலையையும் முன்னாள் போராளி அன்பரசன் மற்றும் இரு மாவீரரின் பெற்றோர் அழகன் இரத்தினாம்பாள் ஆகியோரால் ஏற்றி வைத்து மலர் மாலையை அணிவித்ததனை தொடர்ந்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்வில் கலை நிகழ்வுகளும், மாவீரர்களின் வீரம், தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு தொடர்பான நினைவுரைகளும் இடம்பெற்றன.

இதன்போது கலந்துகொண்ட மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்கள் மதிப்பளிக்கப்பட்டு பழமரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் ஞா.யூட்சன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் இ.ஜெகதீசன், மத குருமார்கள், கிராம மட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்கள், பொதுமக்கள், இளைஞர்கள், யுவதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மதிப்பளிப்பு நிகழ்வை நடத்துவதற்கு முள்ளியவளை வடக்கு கிராம மக்களால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போது அங்கு வருகை தந்த முள்ளியவளை பொலிஸார் நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் யார் எனக் கேள்வி எழுப்பியதுடன், நிகழ்வை முன்னெடுப்பவர்களின் பெயர் விபரங்களையும் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நிகழ்வுக்காக மண்டபத்தின் முன்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகையில் இடம்பெற்றிருந்த கார்த்திகை மலரை மறைக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளித்தல் நிகழ்வு நேற்று(25.11.2026) மாலை யாழ். வலிகாமம் வடக்கு, தெல்லிப்பழையில் இடம்பெற்றுள்ளது.

சிறுவர்களின் பேண்ட் வாத்திய இசையுடன் பெற்றோர், உரித்துடையோர் அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாவீரரின் தந்தை ஒருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மலர்மாலை அணிவித்துள்ளார்.

அதன் பின்னர், ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டதுடன், மலர்வணக்கமும் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பிரதேச சபைத் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்துகொண்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top