News

பலுசிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை – 74 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தகவல்

 

 

பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் சுமார் 74 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணம், நீண்ட காலமாக பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் கோரி போராடி வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின்போது, 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ந்தேதி, பலுசிஸ்தான் தனி சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது.

சுதந்திர நாடாக செயல்பட்டு வந்த பலுசிஸ்தானை, 1948-ம் ஆண்டு மார்ச் 27-ந்தேதி பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தது. அன்று முதல் பலுசிஸ்தான் மக்கள் பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக போராடி வருகின்றனர். இதற்காக பலுசிஸ்தானில் பல்வேறு விடுதலை அமைப்புகள் இயங்கி வருகின்றன.

இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான்களின் கிளை அமைப்பான தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பை சேர்ந்தவர்கள் பலுசிஸ்தானில் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் பலுசிஸ்தானில் தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த 3-ந்தேதி முதல் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் சுமார் 74 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

பலுசிஸ்தானின் குவெட்டா மாவட்டத்தில் உள்ள குர்ரம் பகுதியிலும், கைபர் பக்துன்க்வாவின் மிர் அலி மற்றும் ஒரக்ஸாய் ஆகிய பகுதிகளிலும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உளவுத்துறை மூலம் கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் துல்லியமாக கண்டறியப்பட்டதாகவும், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இருப்பிடங்களில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top