News

ரஷியா உடனான போரில் 55,000 வீரர்கள் உயிரிழப்பு: அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கம்

ரஷ்யாவுடனான நான்கு ஆண்டுகாலப் போரில் இதுவரை உக்ரைன் தரப்பில் 55,000 வீரர்கள் போர்க்களத்தில் உயிரிழந்துள்ளதாக ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் 2 (France 2) தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் இத்தகவலைப் பகிர்ந்த அவர், உயிரிழந்தவர்களில் தொழில்முறை இராணுவ வீரர்கள் மற்றும் கட்டாய இராணுவச் சேவையில் இணைக்கப்பட்டவர்கள் (Conscripts) ஆகிய இரு தரப்பினரும் அடங்குவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2024 டிசம்பரில் 43,000 ஆக இருந்த இந்த எண்ணிக்கை, தற்போது உக்கிரமடைந்துள்ள மோதல்களால் 55,000 ஆக உயர்ந்துள்ளது.

இருப்பினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைத் தவிர பெருமளவிலான மக்கள் “காணாமல் போனவர்கள்” பட்டியலில் உள்ளதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

உக்ரைன் உள்துறை அமைச்சின் தரவுகளின்படி, வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 70,000 பேர் காணாமல் போயுள்ளனர். அதேவேளை, பிபிசி மற்றும் பிற செய்தி நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் ரஷ்ய தரப்பிலும் 160,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பாரிய உயிரிழப்புகளுக்கு மத்தியில், அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் அபுதாபியில் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒரு முன்னேற்றமாக 314 போர்க்கைதிகள் (உக்ரைன் மற்றும் ரஷ்யா தரப்பில் தலா 157 பேர்) பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் மற்றும் கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்தப் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் எவ்வளவு தூரம் வெற்றிபெறும் என்பது உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top