News

பிரித்தானிய முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ 11 மணிநேர விசாரணையின் பின் விடுதலை

 

அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டினுடனான (Jeffrey Epstein) தொடர்புகள் மற்றும் அத்துமீறல்கள் குறித்த விசாரணைகளுக்காகக் கைது செய்யப்பட்டிருந்த பிரித்தானிய முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ , சுமார் 11 மணிநேர விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (19) முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவின் 66ஆவது பிறந்தநாளில், அவர் தங்கியிருந்த சாண்டிரிங்ஹாம் தோட்டத்தில் உள்ள ‘வூட் ஃபார்ம்’ இல்லத்தில் வைத்து தேம்ஸ் வேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவர் அரசாங்கத்தின் விசேட வர்த்தக தூதுவராகப் பணியாற்றியபோது, வியட்நாம், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கான பயணங்கள் குறித்த அரச இரகசிய ஆவணங்களை எப்ஸ்டினுக்கு சட்டவிரோதமாக அனுப்பிய குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த அதிரடிக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அண்மையில் அமெரிக்க நீதித்துறையினால் வெளியிடப்பட்ட எப்ஸ்டின் தொடர்பான இரகசியக் கோப்புகளில், ஆண்ட்ரூ ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து எப்ஸ்டினின் ஆலோசனைகளை அவர் கோரியுள்ளதாக மின்னஞ்சல் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட அவர் அய்ல்ஷாம் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு சுமார் 11 மணிநேரம் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

விசாரணையின் பின்னர் அவர் நேற்று மாலை விடுவிக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவரது சகோதரரும் பிரித்தானிய மன்னருமான சார்லஸ், “சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆண்ட்ரூ ஏற்கனவே தனது அரச பதவிகள் மற்றும் கௌரவப் பட்டங்களிலிருந்து நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 400 ஆண்டுகளில் பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிரேஷ்ட உறுப்பினர் கைது செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். எப்ஸ்டின் தொடர்பான 3 மில்லியன் பக்கங்கள் கொண்ட இரகசிய ஆவணங்கள் அமெரிக்காவினால் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்தே இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top