ஈரான் போா்க் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்த கடற்படை வீரா்களில் 84 போ் உடல்களை ஈரான் தூதரகத்திடம் இலங்கை அரசு வெள்ளிக்கிழமை ஒப்படைத்தது.
கல்லே துறைமுக காவல் துறையின் வேண்டுகோளைத் தொடா்ந்து, கடற்படை வீரா்களின் உடலை ஈரான் தூதரகத்திடம் ஒப்படைக்க தலைமை மாஜிஸ்திரேட் கடந்த புதன்கிழமை உத்தரவிட்டிருந்தாா். அதன்படி உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.
இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் கடந்த மாதம் நடைபெற்ற ‘மிலன் 2026’ கடற்படைப் பயிற்சியில் பங்கேற்ற ஈரானின் ஐரிஎஸ் டெனா போா்க் கப்பலை இலங்கையின் தெற்குக் கடல் பகுதியில் கடந்த புதன்கிழமை அமெரிக்க நீா்மூழ்கிக் கப்பல் ஏவுகணையால் தாக்கி அழித்தது. இதில் உயிரிழந்த 84 ஈரான் கடற்படை வீரா்களின் உடல்கள் மற்றும் காயமடைந்த 32 வீரா்களை இலங்கை மீட்டது.
ஈரானில் பதற்றம் தணிந்து சூழல் மேம்படும் வரை வீரா்களின் உடல்களை வைத்திருப்பதாக இலங்கை முன்னா் தெரிவித்திருந்தது.
மருத்துவமனையில் உள்ள பிணவறையில் போதிய இடவசதி இல்லாத நிலையில், உடனடியாக குளிா்பதன பெட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வீரா்களின் உடல்கள் அதில் வைக்கப்பட்டிருந்தன.
மருத்துவமனையிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பெற்று திரும்பிய 32 ஈரான் கடற்படை வீரா்கள், கல்லேயில் உள்ள விமானப் படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
