News

கலிபோர்னியாவில் இரசாயனக் கசிவு அபாயம்: 40,000 பேர் அவசரமாக வெளியேற்றம்

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பகுதியில் உள்ள விண்வெளி உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில், ஆபத்தான இரசாயனம் கொண்ட பெரிய அளவிலான சேமிப்புத் தொட்டி ஒன்று வெடிக்கும் அல்லது கசியும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள சுமார் 40,000 பொதுமக்களை உடனடியாக வெளியேறுமாறு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒரஞ்சு கவுண்டியில் உள்ள கார்டன் குரோவ் நகரில் அமைந்துள்ள ‘ஜிகேஎன் ஏரோஸ்பேஸ்’ என்ற நிறுவனத்தில் உள்ள சுமார் 7,000 கலன் (26,500 லீட்டர்) கொள்ளளவு கொண்ட ‘மெத்தில் மெதக்ரிலேட்’ என்ற எளிதில் தீப்பற்றக்கூடிய இரசாயனத் தொட்டியே இவ்வாறு பழுதடைந்துள்ளது.

ஏர்பஸ் மற்றும் போயிங் போன்ற முன்னணி விமான நிறுவனங்களுக்கு பாகங்களை தயாரிக்கும் இந்த ஆலையில், வியாழக்கிழமை இரவில் இருந்து இந்தத் தொட்டியின் வெப்பநிலை திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த இரசாயனத் தொட்டி வெடித்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால், கார்டன் குரோவ் உட்பட ஆறு நகரங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கலிபோர்னியாவில் இரசாயனக் கசிவு அபாயம்: 40,000 பேர் அவசரமாக வெளியேற்றம் | Chemical Leak California 40 000 People Evacuated

 

தீயணைப்புப் படையினர் பாதுகாப்பான தூரத்திலிருந்தே தண்ணீரைப் பீய்ச்சியடித்து தொட்டியின் வெப்பநிலையைக் குறைக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் நிலைமையை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வர அவர்களுக்குக் கூடுதல் நேரம் கிடைத்துள்ளது.

இதற்கிடையில், இந்த அபாயகரமான சூழல் காரணமாக அப்பகுதியில் உள்ள ஒரு டசனுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இருப்பினும், கார்டன் குரோவ் காவல் துறையின் தகவல்படி, சுமார் 4,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகள், வணிகங்கள் மற்றும் செல்லப்பிராணிகளின் பாதுகாப்பு குறித்துக் கவலை தெரிவித்து, வீடுகளை விட்டு வெளியேற மறுத்து வருகின்றனர்.

நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, அப்பகுதி மேயர் ஸ்டெபானி க்ளோப்ஃபென்ஸ்டைன் அங்கு இன்னும் தங்கியிருக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்த வெளியேற்ற உத்தரவு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top