பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆளும் தொழிலாளர் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக கட்சியின் தலைவர் பதிவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
“நான் எடுத்த ஒவ்வொரு முடிவும், நான் நேசிக்கும் நாட்டிற்கு முன்னுரிமை அளிப்பதைப் பற்றியதுதான். அதனால்தான் நான் ராஜினாமா செய்கிறேன்”, எனக் கூறியுள்ளார்.
இதன்மூலம் பிரிட்டனில் கடந்த ஆறு ஆண்டுகளில் பதவி விலகும் ஆறாவது தலைவராக கெய்ர் ஸ்டார்மர் உள்ளார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற பிரிட்டன் உள்ளாட்சித் தேர்தல்களில் தொழிலாளர் கட்சி சந்தித்த பெரும் சரிவு அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது.
அடுத்தத் தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை தற்காலிக தலைவராக பதவியில் தொடர்வாக அவரே அறிவித்துள்ளார். மேலும் கட்சியின் புதிய தலைவருக்கான வேட்புமனுக்களை ஜூலை 9 ஆம் தேதி தொடங்குமாறு கட்சியின் தேசிய செயற்குழுவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்தார் . ஜூலை 16ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் எனவும் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 1ம் தேதி அந்நாட்டின் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், அதற்குள் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியின் முன்னாள் மேயரான ஆண்டி பர்ன்ஹாம் , சமீபத்திய இடைத்தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றுள்ளதால், அவரே அடுத்த பிரதமராவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அந்நாட்டு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
