பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிலிப்பைன்ஸ் மத்திய பகுதியில் தக்லோபன் நகரில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இன்று (22) உள்ளூர் நேரப்படி காலை சுமார் 9 மணியளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வழமைப்போல் பாடசாலை இயங்கி வந்த நிலையில், 2 மர்ம நபர்கள் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில், பள்ளியில் இருந்த மாணவர்கள் 3 பேர் பலியானதுடன் மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
டக்லோபன் நகர காவல் அலுவலகம் இந்தத் துப்பாக்கிச் சூட்டை வன்மையாகக் கண்டித்ததுடன், “தகவல் கிடைத்தவுடன்” சம்பவ இடத்தைப் பாதுகாக்க காவல்துறை உடனடியாக அங்கு சென்றதாகவும் தெரிவித்தது.

காயமடைந்தவர்களுக்கு உடனடியாக உதவி அளிக்கப்பட்டு, சிகிச்சைக்காக உரிய மருத்துவ வசதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்து, விசாரணைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் அந்த பாடசாலையின் முன்னாள் மாணவர் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர்கள் 2 பேரும் ஆண்கள் என்றும் இந்த துப்பாக்கி சூட்டுக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரிய வரவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை அந்த பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் “இந்தத் துயரச் சம்பவத்தால் ஏற்பட்ட உடனடி மன உளைச்சலைக் கையாள்வதற்காக, பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அத்தியாவசிய மருத்துவ உதவிகளையும் பொருத்தமான உளவியல் சமூகத் தலையீடுகளையும் வழங்குவதற்கு இத்துறை சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக பிலிப்பைன்ஸின் கல்வித் துறை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
