News

அமெரிக்க அழுத்தங்களுக்கு மத்தியில் வர்த்தக ஒப்பந்தத்தை வலுப்படுத்தும் கனடா – இந்தியா

கனடா மற்றும் இந்தியா இடையிலான விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தை (CEPA) இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்வது தொடர்பாக இரு தரப்பும் கவனம் செலுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் வரி அழுத்தங்களுக்கு மத்தியில் கனடா இந்தியா இடையிலான இந்த வர்த்தக ஒப்பந்தம் இரு தரப்புக்கும் முக்கியத்துவமிக்கதாய் மாறியுள்ளது.

இந்நிலையில் கடந்த காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குப் பின்னர், கனடா – இந்தியா உறவை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை இந்த வாரம் சந்தித்துப் பேச ஆவலுடன் இருப்பதாக கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. உயர்மட்டக் கூட்டத்தொடரையொட்டி ஜெய்சங்கரை சந்திக்கவுள்ளதாக அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

“கனடா – இந்தியா இருதரப்பு உறவு வளர்ந்து வருகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் CEPA ஒப்பந்தத்தை நிறைவு செய்வது எங்களது ஒட்டுமொத்த உத்தியின் முக்கிய அம்சமாகும்” என அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவும் கனடாவும் இதுவரை நான்கு சுற்று வர்த்தக பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.

2024ஆம் ஆண்டில் இந்தியா – கனடா இடையிலான இருதரப்பு வர்த்தகம் 30.8 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.

இந்த வர்த்தகத்தை 2030ஆம் ஆண்டுக்குள் 70 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்த இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top