News

திடீரென பதவி விலகிய பராகுவே ஜனாதிபதி

 

பராகுவே ஜனாதிபதி சாந்தியாகோ பென்யா பதவி விலகல் செய்வதாக அறிவித்துள்ளார்.

நான் ஏதேனும் ஒரு தருணத்தில் தவறிழைத்திருந்தால் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளிச் செய்தியில் தெரிவித்தார்.

‘உங்கள் நம்பிக்கைக்குத் துரோகம் செய்ய வேண்டும் என்பது எனது நோக்கமாக இருந்ததில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

“நமது நாட்டின் ஸ்திரத்தன்மை, சமூக அமைதி மற்றும் நமது ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு” தாம் பதவி விலகுவதாக சாந்தியாகோ பெனா குறிப்பிட்டுள்ளார்.

“பராகுவேயின் நலனை விட எந்தப் பதவியும் மேலானதாக இருக்க முடியாது” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

பராகுவேயின் முன்னணி டிஜிட்டல் வங்கியான யுனோ வங்கி (Ueno Bank) கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளானதைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 3ஆம் திகதி அந்நாட்டு மத்திய வங்கி அதன் நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.

வங்கியின் நிதி நிலைமை சட்டப்பூர்வத் தேவைகளைப் பூர்த்தி செய்யாததே இதற்குக் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வங்கியில் சுமார் 30 இலட்சம் வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளதுடன், வங்கியின் நடவடிக்கைகள் முடக்கப்பட்டதால் பலர் தங்களது வைப்புப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வங்கியின் நிர்வாகம் தொடர்பாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததுடன், ஜனாதிபதி சந்தியாகோ பென்யாவுக்கும் வங்கியின் முன்னாள் உரிமையாளர் குழுமத்துக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்த நெருக்கடியைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு எதிராகப் பதவி நீக்க நடவடிக்கையை முன்னெடுக்க நாடாளுமன்றத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையில், நவம்பர் 5ஆம் திகதி அவர் தனது பதவி விலகலை அறிவித்தார். அதே நாளில், நாடாளுமன்றத்தின் கீழவையில் அவருக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானமும் 78 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top