இலங்கையிலே நடந்தேறிய கொடூர தமிழ் இன அழிப்பை நடாத்தியவர்களின் நண்பர்களாக நின்றது உலகம்- பேராசிரியர் சிவ தயாளன்
இலங்கையிலே நடந்தேறிய கொடூர தமிழ் இன அழிப்பை நடாத்தியவர்களின் நண்பர்களாக நின்றது உலகம்- பேராசிரியர் சிவ தயாளன்
மதிப்பார்ந்த பிரம்ரன் மாநகர பிதா மற்றும் அதன் நிர்வாகக் காப்பாளர்களே!
பேரன்பிற்குரிய உறவுகளே உலக வரலாற்றின் மிக கொடிய இனவழிப்புகள் பலவற்றிற்கு ஆவணப்படுத்திய சாட்சியங்கள் உண்டு. சிலவற்றிற்கு அவ்வாறான சாட்சியங்களும் ஆவணங்களும் இருப்பதில்லை . ஆனால் இக்கொடூர வலி பொதுவானது. இவ்வாறான வலி மிகுந்த இன அழிப்பே தமிழ் இனப்படுகொலையேயாகும் . கடந்த பல தசாப்தங்களாக திட்டமிட்டு சிங்கள மேலாதிக்கம் தமிழினத்தைப் படுகொலை செய்து வருகின்றது. அதன் உச்சமாக முள்ளிவாய்க்காலின் இறுதிப்போரில் லட்சக்கணக்கான எம் உறவுகள் துடிக்கத் துடிக்க கொல்லப்பட்ட நினைவுகளை நாம் கனத்த இதயத்துடன் சுமந்து நிற்கின்றோம். அதற்கான நினைவாலயத்தை அமைக்கும் பணிக்காக நாம் இங்கு கூடி நிற்கின்றோம். இவ்வாறு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேரழிவுத் தமிழின நினைவாலயத்தை கனடாவில் அமைக்கும் பெரும் பணியின் வழிகாட்டியும், அதன் முக்கிய ஆலோசகருமான பேராசிரியர் சிவ தயாளன் அவர்கள் தொடக்கப் பேருரையாற்றினார். .
கனடா ஒட்டாவா கால்ரன் பல்கலைக்கழகப் புவித் தொழில்நுட்ப பொறியியல் பீடத்தின் மதிப்பார்ந்த முதன்மைப் பேராசிரியரும், கால்ரன் கட்டிடப்பொறியியல் கல்லூரி இயக்குனரும், சுற்றுச் சூழல் பொறியியல் பீட துறைசார் தலைவர்களில் ஒருவருமான கலாநிதி சிவ தயாளன் அவர்கள் இந்த நினைவாலயத்தை முன்னின்று அமைக்கும் குழுவின் உப தலைவராவார்.
இலங்கையிலே நடந்தேறிய இந்தக் கொடூர இனவழிப்பை நடாத்தியவர்களின் நண்பர்களாக நின்றது உலகம். இதை இன அழிப்பேன அறிந்திருந்தும்
தமிழினத்தின் மீது நடந்தேறிய கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை ஐ.நாவும், சர்வதேச சமூகமும் இன்னமும் கண்டுகொள்ளாமல் பாராமுகமாக இருப்பது கவலைக்குரியது. இன்றைக்கு பிரம்ரனில் ஏற்பட்டிருக்கின்ற இந்த எழுச்சியால் இலங்கையில் நடைபெற்றது தமிழின அழிப்பே என்கின்ற செய்தியை நாம் உலகிற்கு முரசறைந்து சொல்லுகின்றோம். இந்தச் செய்தி உலக முழுமையையும் ஏற்றுக்கொள்ளட்டும் என்றார் அவர்.
உலகில் இனவழிப்பில் சிக்குண்டவர்களின் நினைவாக நம்மவர்களால் நமது உறவுகளுக்காக அமைக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மகத்தான இனவழிப்பு நினைவாலயம் உலகிற்கு எம் இனவழிப்பை நிச்சயம் எடுத்துக் கூறும்.
தமிழர்களுக்கு எதிராக சிங்கள-பௌத்த சிறீலங்கா பேரினவாத அரசுகள் காலங்காலமாக அடக்குமுறையைக் கட்டவிழ்த்து, திட்டமிட்ட இனப்படுகொலையை அரங்கேற்றி வந்துள்ளது. இவ் இனப்படுகொலையின் உச்சமாக முள்ளிவாய்க்காலின் இனப் பேரழிவு இருக்கின்றது. பொருளாதார கலாச்சார மத மொழி அடையாளங்களை அறவே அழித்த படி இன்றும் அது தொடர்கின்றது.
முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக கூண்டோடு அழித்துக் கொல்லப்பட்ட எமது இரத்த உறவுகளை நினைவுகூர்வது கூட கொடிய செயல் என்கிறது இனவாத அரசு. யாழ் பல்கலைக் கழக வளாகம் உட்பட பல நினைவுத்தூபிகள் அடித்து நொருக்கப் பட்டுள்ளன.
இன்னிலையில் கொல்லப்பட்ட எமது உறவுகளின் கனவுகளை, நினைவுகளை, அவர்களின் பேரவலத்தை நினைப்பதற்கும் அவர்களின் தியாகங்களுக்காக வழிபடவும், அஞ்சலி செலுத்தவும் வேண்டியவர்களாக நாமுள்ளோம். அது எம் வரலாற்றுக் கடமை!
உலகில் இனவழிப்புகளுக்காக கண்ணீர் வடித்து, அவற்றை அடையாளப்படுத்தி, அவர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பவர்கள், எம் ஈழத் தமிழ் மக்களின் பேரழிவைப்பற்றி பாராமுகமாக இருக்கிறனர். இன்னிலையில் பிராம்ரன் நகரசபை இந்த நினைவாலயம் கட்டுவதற்கான நிலத்தை ஒதுக்கி தமிழ் மக்களுக்கு தந்துள்ளது. பிரம்ரன் நகரபிதாவிற்கும் காப்பாளர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி என்று பேராசிரியர் உருக்த்தோடு குறிப்பிட்டார். இந்த நினைவாலய வடிவமைப்பு உலகின் பல நூற்றுக் கணக்கான மாதிரிவடிவங்களில் இருந்து போட்டியடிப்படையில் தகுதியானதை தேர்வானதாக்கிய வடிவாகும். இனவழிபிற்குள் சிக்குண்ட பொஸ்ஸினிய நாட்டின் மகளான சிறப்பு கட்டிட நிபுணர் Ms. Bernia Ramic (from Bosnia) அவர்கள் இதனை நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்.
பேரினவாத அரசின் அடக்கு முறைக்கெதிராக புலம்பெயர் தமிழினம் வெகுண்டெழுந்த வரலாறு இது. தமிழர்கள் ஓர் இன அடையாளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காகவே கொல்லப்படுகின்றார்கள், சித்திரவதை செய்யப்படுகின்றார்ரகள், வலிந்து காணாமல் ஆக்கப்படுகின்றார்கள், வன்புணரப்படுகின்றார்கள் . தமக்கான பூர்வீக வாழ்விடங்களிலிருந்து விரட்டி அடிக்கப்படுகின்றார்கள். அகதிகளாக்கப்பட்டு அவலப் படுத்தப் படுகின்றார்கள். தமிழர்கள் இலங்கையின் வந்தேறு குடிகளாக்கப்பட்டு சிறிலங்காவின் சிங்கள- பெளத்த மேலாண்மைக்கே நாடு என்கிற இன்றைய நாளில் பேராசிரியரின் உரை காத்திரமானது.
உலகளாவிய தமிழ் மக்களின் பங்களிப்புடன் கட்டியெழப்பப்படும் இவ் தமிழ் இன அழிப்பு நினைவுத் தூபிக்கு உங்களனைவரின் நிதியுதவியினை தாராள மனதுடன் அளித்து பங்காளராவதற்கு:
தொடர்புகளுக்கு: (647) 427-6150