News

மேற்குகரையில் இஸ்ரேல் அதிரடி சோதனை; அல்-அக்சா பிரிகேடிஸ் முக்கிய தளபதி சுட்டுக்கொலை

 

 

மேற்குகரையில் இஸ்ரேல் பாதுகாப்பு படை நடத்திய அதிரடி சோதனையில் அல்-அக்சா பிரிகேடிஸ் அமைப்பின் முக்கிய தளபதி உள்பட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

மேற்குகரை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. காசா முனையில் ஹமாஸ் மட்டுமின்றி மேலும் சில ஆயுதமேந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் காசா முனையில் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.

பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பை ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய யூனியன், இஸ்ரேல், ஜப்பான், நியூசிலாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகியவை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. இதனிடையே, காசா முனையில் உள்ள பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு மீது கடந்த வெள்ளிக்கிழமை முதல் 3 நாட்களாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின் தளபதிகள், பொதுமக்கள், குழந்தைகள் என மொத்த 44 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர் இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதல் எகிப்து தலைமையில் நடந்த அமைதிப்பேச்சுவார்த்தைக்கு பின் சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.30 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதேவேளை, பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பை போன்று மேற்குகரையில் அல்-அக்சா மாட்ரர்ஸ் பிரிகேடிஸ் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. பாலஸ்தீன தேசிய விடுதலை இயக்கமான ஃபதாவின் ராணுவ பிரிவாக அல்-அக்சா பிரிகேடிஸ் உள்ளது.

இந்த அல்-அக்சா மாட்ரர்ஸ் பிரிகேடிஸ் என்ற அமைப்பை இஸ்ரேல், ஐரோப்பிய யூனியன், கனடா, ஜப்பான், நியூசிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், மேற்குகரையின் நப்லஸ் நகரில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலை அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, பாதுகாப்பு படையினர் நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இஸ்ரேல் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இரு தரப்புக்கும் இடையே பல மணி நேரம் இந்த துப்பாக்கிச்சண்டை நீடித்தது

. இந்த துப்பாக்கிச்சண்டையில் அல்-அக்சா மாட்ரர்ஸ் பிரிகேடிஸ் அமைப்பை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். அல்-அக்சா மாட்ரர்ஸ் பிரிகேடிஸ் அமைப்பின் தளபதி இப்ராகிம் அல்-நபுல்சி (வயது 30), இஸ்லாம் சபொஹா, ஹசன் ஜமால் தஹா ஆகிய 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 40 பேர் படுகாயமடைந்தனர்.

இப்ராகிம் அல்-நபுல்சி இஸ்ரேல் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் தேடப்படும் பயங்கரவாதியாக இஸ்ரேல் அறிவித்து இப்ராகிமை தேடி வந்தது. இந்த நிலையில் இப்ராகிம் துப்பாக்கிச்சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்பு படைக்கு அந்நாட்டு பிரதமர் யசிர் லபிட் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top