துருக்கி-சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது, 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம்
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
காசியான்டெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கி – சிரியாவில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கி – சிரியாவின் பல்வேறு நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.இந்த நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி உள்ளது.
இந்த நிலையில், இன்றைய காலை நிலவரப்படி நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15, 383 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியில் 12 ஆயிரத்து 391 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் 2 ஆயிரத்து 992 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 383 ஆக அதிகரித்துள்ளது. 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
கடும் பனிப்பொழிவுக்கு இடையே கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர். இடிபாடுகளை தோண்டத்தோண்ட சடலங்கள் தென்பட்ட வண்ணம் உள்ளன. எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகளின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.