News

ஹன்டா வைரஸ் பரவல் எண்ணிக்கை மிக விரைவில் பலமடங்காகலாம்… WHO தலைவர்

எம்வி ஹோண்டியஸ் என்ற சொகுசுக் கப்பலில் ஏற்பட்ட ஹன்டா வைரஸ் பரவல் தொடர்பான கூடுதல் எண்ணிக்கை இன்னும் வெளிப்படக்கூடும் என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.

ஒட்டுமொத்த பொது சுகாதார அபாயம் குறைவு என்றே உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து மதிப்பிட்டு வருகிறது. இதனிடையே, செய்தியாளர் சந்திப்பில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்,

இந்த நோய்ப் பரவலுக்கு ஆண்டிஸ் வைரஸ் காரணமாகியுள்ளது என்றும், இது நெருங்கிய தொடர்பு நிலைகளில் மனிதர்களிடையே பரவக்கூடிய ஹன்டா வைரஸின் ஒரு அரிய வகை என்றும் விளக்கமளித்துள்ளார்.

நோய் பாதிப்பு ஏற்பட்டு அறிகுறிகள் தென்பட குறைந்தது 6 வாரங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்றும், மிக விரைவில் பாதிப்பு எண்ணிக்கை பலமடங்காகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தீவிரமான சம்பவம் என அவர் குறிப்பிட்டிருந்தாலும் பொது சுகாதார அபாயம் குறைவாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

அர்ஜென்டினாவிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து காபோ வெர்டே நோக்கிப் பயணித்த, நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த எம்வி ஹோண்டியஸ் என்ற சொகுசுக் கப்பலில் இந்த நோய் பரவல் ஏற்பட்டது.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இதுவரை மூன்று மரணங்கள் உட்பட எட்டு பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளனர். ஐந்து பேருக்கு ஹன்டா வைரஸ் தொற்று இருப்பது ஆய்வகத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது, அதே சமயம் மூவருக்கு தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஹன்டா வைரஸ் பொதுவாகப் பாதிக்கப்பட்ட கொறித்துண்ணிகள் அல்லது அவற்றின் சிறுநீர், உமிழ்நீர் அல்லது கழிவுகளுடன் ஏற்படும் தொடர்பின் மூலம் பரவுகின்றன என்று டாக்டர் கெப்ரேயேசஸ் விளக்கமளித்துள்ளார்.

இந்த நோய்ப் பரவலுக்குக் காரணமான வைரஸ், ஆண்டிஸ் வைரஸ் ஆகும். இது முக்கியமாக லத்தீன் அமெரிக்காவில் காணப்படுகிறது. மேலும்,  ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குக் குறைந்த அளவில் பரவக்கூடிய ஒரே திரிபாகும் ஹன்டா வைரஸ்.

ஆண்டிஸ் வைரஸின் முந்தைய பரவல் நிகழ்வுகளில், மக்களுக்கிடையேயான நோய்ப்பரவலானது, குறிப்பாகக் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய துணையினர் மற்றும் மருத்துவச் சிகிச்சை அளிப்போர் ஆகியோரிடையே, நெருக்கமான மற்றும் நீண்டகாலத் தொடர்புடன் தொடர்புடையதாக இருந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது எம்வி ஹோண்டியஸ் கப்பலில் அடையாளம் காணப்பட்ட முதல் நோயாளிக்கு ஏப்ரல் 6 ஆம் திகதி அறிகுறிகள் தென்பட்டதாகவும், அவர் ஏப்ரல் 11 ஆம் திகதி கப்பலிலேயே மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவரது மனைவி செயின்ட் ஹெலினாவில் கப்பலிலிருந்து இறங்கிய பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டார்; பின்னர், ஏப்ரல் 25 அன்று விமானப் பயணத்தின்போது உடல்நிலை மேலும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் அவர் மரணமடைந்தார்.

இதனிடையே, எம்வி ஹோண்டியஸ் கப்பலில் உள்ளவர்களுக்கு உதவ ஸ்பெயின் ஒப்புக்கொண்டதை அடுத்து, அக்கப்பல் தற்போது கேனரி தீவுகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top