ஹோர்முஸை (Strait of Hormuz) திறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் படைகள், ஈரானின் ஏழு “சிறிய படகுகள்” மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக, ஈரானின் 7 சிறிய படகுகளை அமெரிக்கப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
இந்நிலையில், ஈரான் தங்களுக்குத் தொடர்பில்லாத பிற நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தி வருவதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக, தென் கொரியக் கப்பல் ஒன்று ஈரானால் இலக்கு வைக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்பிராந்தியத்தில் வணிகப் பாதுகாப்பை உறுதி செய்ய மற்ற நாடுகளும் முன்வர வேண்டும் என ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
“தென் கொரியா இந்தத் திட்டத்தில் இணைவதற்கான நேரம் இதுவென நான் கருதுகிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சூழல் குறித்து விரிவான தகவல்களை வழங்குவதற்காக, அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) மற்றும் கூட்டுப்படைத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் (Gen Dan Caine) ஆகியோர் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளனர்.
தற்போது வெள்ளை மாளிகையில் நடைபெறவுள்ள மற்றொரு நிகழ்வில் ஜனாதிபதி ட்ரம்ப் கலந்துகொள்ள உள்ள நிலையில், அங்கு மேலதிகத் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
