யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் மருந்து களஞ்சிய சாலையிலையே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தீயிணை அணைக்க மாநகர சபையினர், வைத்தியசாலை ஊழியர்கள், பாதுகாப்பு தரப்பினர், காவல்துறையினர் உள்ளிட்ட தரப்பினர் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனைத் தொடர்ந்து, தீ விபத்து நடந்த இடத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மாவட்ட செயலர் ம.பிரதீபன் மற்றும் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறுதிருமுருகன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, வைத்தியசாலை பணிப்பாளரிடம் நிலைமைகளைக் கேட்டு அறிந்து கொண்டுள்ளனர்.
மேலும், பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி, தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அவர்களை அழைத்துச் சென்று நிலைமைகளை எடுத்துரைத்துள்ளார்.

இதன்போது, தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தமது உயிரையும் பொருட்படுத்தாது, மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் படையினருக்கும் இராணுவத்தினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கும் அவர்கள் நன்றிகளையும் தெரிவித்தனர்.
