கடந்த மாதம் தென்மேற்கு ஈரான் வான்பரப்பில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க எஃப்-15 ரக போர் விமானம், சீனத் தயாரிப்பு ஏவுகணையால் தாக்கப்பட்டிருக்கலாம் என ஒரு புதிய அறிக்கை வெளியாகியுள்ளது.
மறைமுகத் தாக்குதல் விமானத் தொழில்நுட்பம் மற்றும் தொலைதூர ரேடார் அமைப்புகள் உள்ளிட்ட கூடுதல் இராணுவ ஆதரவை சீனா ஈரானுக்கு வழங்கியிருக்கலாம் என்று இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் எஃப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் போன்ற மேம்பட்ட போர் விமானங்களைக் கண்காணிக்கும் ஈரானின் திறனை இந்த உபகரணம் மேம்படுத்தியிருக்கக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்த ஜெட் விமானம் தோளில் வைத்து ஏவப்படும் ஏவுகணையால் (MANPADS என்றும் அழைக்கப்படுகிறது) தாக்கப்பட்டதாகக் கூறினார்.
இவை சிறிய, கையடக்க ஏவுகணைகள் ஆகும். இவற்றை ஒருவர் தன் தோளில் சுமந்து, தாழ்வாகப் பறக்கும் விமானங்களை நோக்கிச் சுட முடியும். இவை சுமார் 7 அடி நீளமும், ஏறத்தாழ 40 பவுண்டுகள் எடையும் கொண்டவை என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
விமானம் கீழே விழுந்ததை அடுத்து, அதில் இருந்த விமான ஊழியர்களைக் கண்டுபிடிப்பதற்காக 36 மணி நேரத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரல் மாதம் அமெரிக்க விமானம் எப்படி சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் இன்னும் விசாரித்து வருகின்றனர்.
பல பத்தாண்டுகளில் எதிரித் தாக்குதலால் ஒரு அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்படுவது இதுவே முதல் முறையாக இருக்கலாம் என்பதால், இந்தச் சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அந்த ஜெட் விமானத்தில் இரண்டு பணியாளர்கள் இருந்தனர். விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு அவர்கள் இருவரும் பாதுகாப்பாக வெளியேறினர்.
விமானி சுமார் ஏழு மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டார், ஆனால் இரண்டாவது பணியாளரான ஆயுத அமைப்பு அதிகாரியைக் கண்டுபிடிக்க அதிக நேரம் சென்றிருந்தது..
அவர் ஈரானின் சாக்ரோஸ் பிராந்தியத்தின் மலைகளில் ஒளிந்திருந்ததாகவும், சுமார் இரண்டு நாட்களுக்குப் பிறகே மீட்கப்பட்டதாகவும் பென்டகன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
