News

நியூயோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் துப்பாக்கிச் சூடு ; 17 வயது சிறுவன் கைது 

நியூயோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று வியாழக்கிழமை (18) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டினால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டதோடு, 17 வயது சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ வேளைக்கு சற்று முன்னதாக குறித்த பகுதியில் தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கமானது (NBA) கூடைப்பந்தாட்ட சம்பியனான நியூயோர்க் நிக்ஸ் அணியின் வெற்றியைக் கொண்டாடும் அணிவகுப்பு நிகழ்ச்சியை காண பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர்.

அப்போது அங்கு, துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதையடுத்து, சதுக்க வளாகத்தை சூழ இருந்த சுற்றுலாப் பயணிகள் உட்பட பெருந்திரளான மக்கள் பாதுகாப்பு கருதி ஓட்டமெடுத்தனர்.

குறித்த நிகழ்வுக்காக பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் கடமையில் ஈடுபட்டிருந்தபோது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்போது ஏற்பட்ட குழப்பகரமான சூழ்நிலையில் மக்கள் வெவ்வேறு திசை நோக்கி  ஓடினர்.

இந்த பதற்றகரமான வேளையில் அங்கு 26 வயதுடைய நபரொருவர் கத்தியால் வெட்டப்பட்டு காயமடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்த துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக வெளியான காணொளியில் சம்பவ இடத்தில் ஒரு கும்பல் நிற்பதாகவும் அந்த கும்பலில் கறுப்பு ஆடை அணிந்த ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மக்களை மிரட்டுவதாகவும் பிறகு அங்கிருந்து தப்பி ஓடுவதாகவும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகித்து, 17 வயது சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்து, தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top