News

42 ஆண்டுகளுக்கு பின் தண்ணீருக்கு அடியில் இருந்து மீண்டும் வெளிப்பட்ட வரலாறு.. சயாம் மரண ரெயில் பாதை

 

இரண்டாம் உலகப் போரின் போது அப்போதைய சயாம் (தாய்லாந்து) மற்றும் பர்மா (மியான்மர்) நாடுகளை இணைக்கும் வகையில் 415 கிலோமீட்டர் நீளம் ஜப்பான் ராணுவம் ரெயில்வே வழித்தடம் ஒன்றை அமைத்தது.

இதன் கட்டுமானப் பணியில் பிரிட்டிஷ், ஆஸ்திரேலிய, அமெரிக்க மற்றும் டச்சு நாடுகளை சேர்ந்த சுமார் 60,000 போர்க்கைதிகளும் மலேசியா, பர்மா, தாய்லாந்தை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களும் அடிமைகளாக ஈடுபடுத்தப்பட்டனர். இதில் தமிழர்களும் அடக்கம்.

ஜப்பானியர்களின் சித்திரவதை, போதிய உணவின்மை, ஓய்வற்ற உழைப்பு மற்றும் காலரா போன்ற நோய்களால் 12,500க்கும் மேற்பட்ட போர்க்கைதிகளும், 75,000க்கும் அதிகமான அடிமைத் தொழிலாளர்களும் இப்பாதையை அமைக்கும் போது பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனால் தான் இது ‘மரண ரெயில் பாதை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த மரண ரெயில் பாதையின் சில பகுதிகள் இன்றும் தாய்லாந்தில் பயன்பாட்டில் உள்ளன.

‘பிரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வாய்’ மற்றும் ‘தி ரெயில்வே மேன்’ போன்ற ஹாலிவுட் திரைப்படங்கள் இந்த வரலாற்றின் பின்னணியில் எடுக்கப்பட்டவை ஆகும்.

காலங்கள் செல்ல இந்த ரெயில் தடம் உலகெங்கிலும் இருந்து வரும் சுற்றுலா பார்வையாளர்களை ஈர்க்கத் தொடங்கியது. வரலாற்றை நினைவுகூரும் எச்சமாக இந்த தடம் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ரெயில் தடத்தில் அமைந்திருந்த நிதே ரெயில் நிலைய எச்சங்கள் 42 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீருக்கு அடியிலிருந்து முழுமையாக வெளியே வந்துள்ளது.

தாய்லாந்தின் காஞ்சனபுரி மாகாணத்தில் உள்ள வஜிராலங்கோர்ன் அணை பராமரிப்புப் பணிகளுக்காக, அதன் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டதால், இந்த நிதே ரெயில் நிலைய கட்டமைப்பின் எச்சங்கள் வெளியே தெரிந்துள்ளன.

இந்த பாதையில் இருந்த பெரும்பாலான நிலையங்கள் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், இது மிக முக்கிய வரலாற்று ஆதாரமாக பார்க்கப்படுகிறது.

எனவே அந்த நிலையத்தை ஆய்வு செய்ய பல்வேறு நாட்டு வரலாற்று ஆய்வாளர்கள் அங்கு படையெடுத்துள்ளனர்.

வரும் ஆகஸ்ட் மாதத்துடன் அணையின் பராமரிப்புப் பணிகள் முடிவடைய உள்ளதாலும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைய உள்ளதாலும் இந்த அணை மீண்டும் நீரால் நிரப்பப்படும்.

அதற்குள் அங்குள்ள வரலாற்று ஆதாரங்களையும், கலைப்பொருட்களையும் சேகரிக்க ஆய்வாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தற்போது வரை அந்த நிலையத்தில் இன்ஜின்களைப் பழுதுபார்க்கும் கான்கிரீட் குழி சிதையாமல் அப்படியே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top