கடந்த நான்கு மாதங்களில் இந்தத் தூதரகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும். எனினும், இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
திங்கட்கிழமை அதிகாலை 4.46 மணியளவில், யுனிவர்சிட்டி அவென்யூவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தைக் கேட்டதைத் தொடர்ந்து சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டால் தூதரகக் கட்டிடத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளதுடன், சம்பவ இடத்திலிருந்து தோட்டாக்களின் உறைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்குப் பின்னர் வெள்ளை நிற கார் ஒன்றில் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றதாகவும், அதனைத் துரத்திச் சென்ற பொலிஸார் அதிக வேகம் காரணமாக பின்தொடர்வதை நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 10 ஆம் திகதியும் இதே அமெரிக்கத் தூதரகத்தை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், யூதப் பாடசாலைகள் மற்றும் ஜெப ஆலயங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.
மேலும், டொராண்டோ பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு பணம் வழங்கி அமெரிக்கத் தூதரகம் மற்றும் யூத நிறுவனங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தத் தூண்டப்படுவதாக கடந்த ஜூன் மாதம் கனேடிய பொலிஸார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மார்ச் மாதத் தாக்குதல் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டதுடன், சம்பவங்களின் தொடர்ச்சியில் ஒரு பொலிஸ் அதிகாரியும் உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில், ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட், அமெரிக்கத் தூதரகம் மற்றும் யூதர்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அமெரிக்க வெளிவிவகாரத் திணைக்களம், கனேடிய அதிகாரிகளுடன் இணைந்து விசாரணைகளில் ஒத்துழைத்து வருவதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும் தூதரகத்தின் சேவைகள் வழக்கம்போல் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
