பிபிசி, எச்.எஸ்.பி.சி ஐக்கிய அரபு அமீரக வங்கி, ஏர் பிரான்ஸ் மற்றும் ஐகியா உட்பட உலகின் சுமார் 200 முன்னணி இணையதளங்கள் மீது பாரிய சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சைபர் பாதுகாப்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னணி நிறுவனங்கள் தமது பயனர்களின் இணைய அனுபவத்தைத் தனிப்பயனாக்கப் பயன்படுத்தும் ‘ஒப்டிமைஸ்லி’ எனும் டிஜிட்டல் தளத்தின் கருவிகளுக்குள் ஹேக்கர்கள் தீங்கிழைக்கும் ஜாவாஸ்கிரிப்ட் குறியீட்டைப் புகுத்தியுள்ளனர். இதன் மூலம் சுமார் 178 இணையதளங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
பயனர்களின் கடன் அட்டை இலக்கங்கள், கிரிப்டோகரன்சி சொத்துக்களைத் திருடுவதற்கும், ஆப்பிள் சாதனங்களுக்குள் தீங்கிழைக்கும் மென்பொருளைப் பதிவேற்றி அவற்றை ஊடுருவுவதற்கும் ஹேக்கர்கள் முயற்சித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலை முதன்முதலில் கண்டறிந்த சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் ஸ்காட் ஹெல்ம் , உலகில் அதிகம் பார்வையிடப்படும் Zoom, BBC, CNN, Salesforce, GitLab, IKEA, HSBC (UAE), Equifax, Air France-KLM, Ledger மற்றும் Peacock ஆகிய தளங்கள் இதில் அடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 16 ஆம் திகதி சுமார் 9 மணி நேரத்திற்குள் தாக்குதல்தாரிகளின் கிரிப்டோ பணப்பைகளுக்கு சுமார் 7,040 அமெரிக்க டொலர்கள் (12,787 அவுஸ்திரேலிய டொலர்கள்) மாற்றப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெரும்பாலான இணையதளங்களிலிருந்து தீங்கிழைக்கும் குறியீடுகள் அகற்றப்பட்டுள்ளன. பாதுகாப்புக் குறைபாடு கண்டறியப்பட்டுக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்படக்கூடிய பாதை முடக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஒப்டிமைஸ்லி நிறுவனம் எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
