நைஜீரியாவின் மத்திய மாகாணத்தில் உள்ள தூத்த நாக சுரங்கம் ஒன்றில் கார்பன் மோனாக்சைட் விஷவாயு கசிந்ததில் 37 தொழிலாளா்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாகாணத்தின் வேஸ் பகுதியில் செயல்பட்டு வரும் சுரங்கத்தில், நேற்று முன்தினம் தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, விஷவாயு பரவியதாகக் கூறப்படுகிறது. மோசமான காற்றோட்டம் உள்ள சுரங்கங்களில் நிலத்தடியில் நச்சு வாயு படிந்ததாக நம்பப்படுகிறது, இதனால் தொழிலாளர்கள் தங்கள் இரவுப் பணி முடிவதற்கு சற்று முன்பு சரிந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத்துயர சம்பவத்தில் 37 தொழிலாளா்கள் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மேலும் 25 போ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். காலையில் பணிக்கு சென்றவர்களே இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றிருப்பதை கண்டறிந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.
நைஜீரியாவில் போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி செயல்படும் சட்டவிரோத சுரங்கங்களில் இதுபோன்ற விபத்துகள் தொடா்கதையாகி வருவது தெரிந்ததே.
