ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஈரானில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நேற்று இரவு வான்வழி தாக்குதல் நடத்தியது. தலைநகர் தெஹ்ரான், அல்புரோஸ் மாகாணத்தில் உள்ள எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றி எரிந்து வருகிறது. மேலும், கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் மற்றும் அதன் கட்டமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தப்படுள்ளது. இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
