News

ஈரானுக்கு ஆதரவாக களம் இறங்கும் ரஷியா; அதிநவீன கண்காணிப்பு விமானத்தை அனுப்பியது

 

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே நடந்து வந்த சண்டை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனிடையே ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனை எதிர்த்து ஈரான் மீது அமெ ரிக்கா சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் முறிந்தது.

இதனால் இரு நாடுகளும் தற்போது தீவிரமாக ராணுவத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களை ஈரான் தாக்கி வருகிறது. இதனால் போர் பதற்றம் உச்சம் அடைந்து வருகிறது.

இதனிடையே அமெரிக்கா-ஈரான் போரில் ராணுவ பலம் வாய்ந்த ரஷியாவும் களம் இறங்குவது ஏறக்குறைய முடிவாகியுள்ளது. ரஷிய அதிபர் புதின், நாட்டின் அதிநவீன ராணுவக் கட்டுப்பாட்டு விமானத்தை தெஹ்ரானுக்கு அனுப்பி வைத்துள்ளார். டுபோளேவ்-214 பி என்ற இந்த கண்காணிப்பு விமானம் ‘உலக அழிவு நாள்’ (டூம்ஸ்டே) விமானம் என்று உலக நாடுகளால் வர்ணிக்கப்படுகிறது.

போர் அல்லது தேசிய அவசரநிலைகளின்போது, வான்வழியாக இருந்துகொண்டே ஒட்டு மொத்த ராணுவ செயல்பாடுகளையும் வழிநடத்தப் பயன்படும் ஒரு நடமாடும் கட்டுப்பாட்டு மையமாக இந்த விமானம் பயன் படுத்தப்படுகிறது. அதிநவீன தகவல் தொடர்பு அமைப்புகள், செயற்கைக்கோள் இணைப்புகள் மற்றும் மின்னணு போரைச் சமாளிக்கும் ‘ஜாமிங்’ எதிர்ப்பு தொழில்நுட்பங்கள்உள்ளன. ரஷியாவின் மிக உயர்மட்ட அரசியல் மற்றும் ராணுவத் தலைவர்களை ஏற்றிச் செல்லும் சிறப்பு ரஷிய விமானப்படை பிரிவால் இது இயக்கப்படுகிறது.

அமெரிக்காவின் தீவிரத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் ஈரானுக்கு, ரஷியா தனது செயற்கைக்கோள் படங்கள் மற்றும் உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், உயர்மட்ட ராணுவ ஆலோசனைகளை நடத்துவதற்கும் இந்த விமானம் உதவியாக இருக்கும் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருது கின்றனர். ஈரான் மீதான தாக்குதலில் தங்களது முழு ஆதரவு ஈரானுக்கு உண்டு என்பதை ரஷியா இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top