News

எபோலாவுக்கு எதிரான புதிய தடுப்பூசி

கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அதற்கு எதிரான புதிய தடுப்பூசியின் மனிதர்களுக்கான முதற்கட்ட சோதனையை ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நேற்று(13.07.2026) தொடங்கியுள்ளது.

‘பிடி-எபோவ்’ (BD-EBOV) என்று அழைக்கப்படும் இந்த ஆரம்பகட்ட சோதனையில், 18 முதல் 55 வயதுக்குட்பட்ட 50 ஆரோக்கியமான பெரியவர்களுக்கு ‘ChAdOx1 BDBV’ என்ற தடுப்பூசி செலுத்தப்பட்டு, அதன் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு  திறன் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது.

ஒக்ஸ்போர்டு/அஸ்ட்ராசெனெகா கோவிட்-19 தடுப்பூசிக்கு பயன்படுத்தப்பட்ட அதே வைரஸ் வெக்டார் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒக்ஸ்போர்டு வேக்சின் குரூப் மற்றும் பாண்டமிக் சயின்சஸ் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகளால் இந்த எபோலா தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் பங்காளியான இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட், வெறும் இரண்டு வாரங்களுக்குள் சுமார் 6,20,000 தடுப்பூசி டோஸ்களை உற்பத்தி செய்து சேமித்து வைத்துள்ளதுடன், இந்த முதற்கட்ட சோதனைக்காக 4,000 டோஸ்களை வழங்கியுள்ளது.

தொற்றுநோய்களுக்கான தடுப்பு மருந்து கூட்டமைப்பு (CEPI) இந்த தடுப்பூசி உருவாக்கத்திற்காக முதற்கட்டமாக 8.6 மில்லியன் டொலர் வரை முதலீடு செய்யவுள்ளது.

இந்த ஆரம்பகட்ட சோதனை வெற்றிகரமாக அமைந்தால், பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விரைவாகவும் மலிவு விலையிலும் தடுப்பூசிகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top