அமெரிக்காவின் கடும் எரிபொருள் தடைக்கட்டுப்பாடுகள் காரணமாக கியூபாவின் மின் உற்பத்தி கட்டமைப்பு பெரும் அழுத்தத்தைச் சந்தித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை (14) அங்கு மீண்டும் நாடளாவிய ரீதியில் தேசிய மின் கட்டமைப்பு செயலிழந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்குள் கியூபா எதிர்கொள்ளும் மூன்றாவது பெரிய மின்தடை இதுவாகும்.
கியூபாவின் கிழக்கு மாகாணமான ஹோல்கினில் உள்ள மின் உற்பத்தி நிலையம் ஒன்றில் ஏற்பட்ட கோளாறினால் மின் கட்டமைப்பின் அதிர்வெண்ணில் திடீர் மாற்றம் ஏற்பட்டு, மதிய வேளையில் ஒட்டுமொத்த நாடும் இருளில் மூழ்கியது.
மின்சாரத்தை மீட்டெடுப்பதற்கான அவசர நெறிமுறைகள் செயல்படுத்தப்பட்டு, வைத்தியசாலைகள் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள்போன்ற முன்னுரிமை இடங்களுக்கு “மைக்ரோ-ஐலன்ட்ஸ்” (Micro-islands) மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
தலைநகர் ஹவானாவின் 4% பகுதிக்கும், குவாண்டனாமோ, சியென்புகோஸ் மற்றும் மடன்சாஸ் ஆகிய மாகாணங்களின் வைத்தியசாலைகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மையங்களுக்கும் மின்சாரம் ஓரளவு மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
கியூபா தனக்குத் தேவையான எரிபொருளில் 40% மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்கிறது. மாற்று வழிகள் இல்லாததால் ஏற்பட்டுள்ள இந்த மின்தடை மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியுள்ளது.
நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
பொதுப் போக்குவரத்து சேவைகள் பெருமளவில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், விமானச் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
சமையல், குடிநீர் விநியோகம், இணையம் மற்றும் தொலைபேசி சேவைகள் போன்ற அத்தியாவசியத் தேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
வெனிசுவேலாவின்முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கியூபாவிற்கு எரிபொருள் வழங்கும் நாடுகள் மீது வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனவரியில் எச்சரித்திருந்தார். இதனால் கியூபாவிற்கு எரிபொருள் இறக்குமதி செய்வது முற்றிலும் முடங்கியுள்ளது.
கடந்த வார இறுதியில் கியூபாவிற்குப் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட அமெரிக்கக் காங்கிரஸின் நான்கு ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள், ட்ரம்ப் விதித்துள்ள இந்த கடுமையான எரிபொருள் தடையானது கியூபாவை ஒரு “அமைதியான காசா” போல மாற்றி வருவதாகக் விவரித்துள்ளனர்.
கடந்த வாரம் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏற்பட்ட இரு மின்தடைகளால் 9 மில்லியனுக்கும் அதிகமான கியூப மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். அதற்கு முன்னர் கடந்த மார்ச் மாதத்திலும் இருமுறை நாடு தழுவிய மின்தடைகள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
