பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதுடன், அவர்களை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்வதற்கு அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் தமிழ் அரசியல் கைதியுமான முருகையா கோமகன் வலியுறுத்தியுள்ளார்.
சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் அமைந்துள்ள என்.எம் பெரேரா கேந்திர மத்திய நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் நிலவிய இனப்பிரச்சினையின் முரண்பாட்டு விளைவுகளினாலேயே நாட்டில் போராட்டங்கள் இடம்பெற்றன. அந்தப் பின்னணியில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களே தமிழ் அரசியல் கைதிகளாவர். நாட்டில் போர் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும், இன்னமும் தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளுக்குள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
அண்மைக்காலமாகச் சிறைகளுக்குள் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழலால், கைதிகளும் அவர்களின் குடும்பத்தினரும் மிகுந்த அச்சத்திலும் பதற்றத்திலும் வாழ்கின்றனர்.
உலகளவில் போர் நிறைவடைந்த பின்னர் போர்க்கைதிகளும் அரசியல் கைதிகளும் பரிமாறப்பட்டு விடுதலை செய்யப்படுவது வழக்கமான நடைமுறையாகும்.
அண்மையில் காஸா மோதல்களுக்குப் பின்னர்கூட கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், 31 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. கடந்த காலத்தில் இலங்கை – இந்திய ஒப்பந்தக் காலத்திலும், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமாதான உடன்படிக்கைக் காலத்திலும் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தபோதிலும்கூட, இரவோடு இரவாகக் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
அத்துடன், 1988 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் கிளர்ச்சியில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களும்கூட, 1994ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள். அன்று மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் பெற்ற அதே சலுகையை, இன்றைக்கு மக்கள் விடுதலை முன்னணியின் ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் வழங்க மறுக்கிறது?
நடந்து முடிந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களின்போது, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதி அவர்களின் தேர்தல் அறிக்கைகளில் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சி அமைத்து ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவர்கள் சிறைகளிலேயே வாடுகின்றனர். அதேநேரம், சிறைகளில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என நீதி அமைச்சர் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்துவது தமிழ் மக்களை ஏமாற்றும் செயலாகும்.
சிறைகளுக்குள் காணப்படும் அசாதாரண சூழலால் இறுதியாகப் பாதிக்கப்படுபவர்கள் தமிழ் அரசியல் கைதிகளே. எனவே, மனிதாபிமான அடிப்படையில் அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்து, அவர்களை உடனடியாக விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்
