News

இளைஞர்கள் மத்தியிலும் பெருங்குடல் புற்றுநோய் அதிகரிப்பு – விசேட வைத்திய நிபுணர் சுனந்தா நிரூபன் எச்சரிக்கை

 

நாட்டில் பெருங்குடல் சார்ந்த நோய் நிலைமைகளால் பாதிப்புக்குள்ளாகுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதோடு, தற்போது இளைஞர்கள் மத்தியிலும் பெருங்குடல் புற்றுநோய் உள்ளிட்ட பெருங்குடல் சார்ந்த பாதிப்பு அதிகரித்து வருவதாக காலி தேசிய வைத்தியசாலையின் உணவுக்காலவாய் தொகுதி மற்றும் கல்லீரல் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சுனந்தா நிரூபன் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை (12) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் கண்டறியப்படும் பிரதான ஐந்து புற்றுநோய்களில் பெருங்குடல் புற்றுநோய் முக்கிய இடம் வகிக்கிறது. தரவுகளின்படி சமூகத்தில் உள்ள ஒரு இலட்சம் பேரில் 10.2 சதவீதமானோர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த இரண்டு தசாப்தங்களாக பெருங்குடல் சார்ந்த நோய்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே பெருங்குடல் புற்றுநோய் அதிகமாக ஏற்படுகின்ற போதிலும், தற்போது இளைஞர்கள் மத்தியிலும் பெருங்குடல் புற்றுநோயின் பாதிப்பு அதிகரித்துள்ளது.

அத்துடன் 50 – 60 சதவீதமான நோயாளர்கள் நோயின் பிந்திய நிலையிலேயே சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு வருகின்றனர். நாட்பட்ட நோய் நிலைமையின் போது நோயாளர்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இலங்கையில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகும் புற்றுநோய்களில் பெருங்குடல் புற்றுநோய் 2ஆவது இடத்தில் உள்ளது. பெண்களுடன் ஒப்பிடும் போது ஆண்களே இவ்வாறான குடல் புற்றுநோய்களால் அதிகளவில் பாதிக்கப்படுவதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அத்தோடு பெண்கள் மத்தியிலும் பெருங்குடல் புற்றுநோயின் பாதிப்பு அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. இந்நிலையைத் தவிர்க்க, மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், மலப்பழக்கவழக்கங்களில் மாற்றம், திடீர் வயிற்றுவலி, பசியின்மை, காரணமின்றி உடல் எடை குறைதல் மற்றும் இரத்தசோகை போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

மேலும் மாறிவரும் வாழ்க்கைமுறை, நார்ச்சத்து இல்லாத உணவுகள், துரித உணவுகள், உடற்பயிற்சியின்மை மற்றும் மது, புகைபிடித்தல் ஆகியனவும் இந்நோய் ஏற்பட பிரதான காரணங்களாக உள்ளன. எனவே, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியைப் பின்பற்றுவதன் மூலம் பெருங்குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும் என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top