News

கொங்கோவில் பரவி வரும் எபோலா வைரஸ்: தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றினைக் கட்டுப்படுத்தும் நோக்கில், முதன்மைச் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்போது பரவி வரும் ‘புண்டிபுக்யோ’ ரக எபோலா வைரஸுக்கு எதிராக இந்தத் தடுப்பூசியின் செயல்திறன் இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படாத நிலையிலும், அவசர நடவடிக்கையாகக் கிசாங்கானி நகரில் இந்த தடுப்பூசி அளிப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ரக வைரஸுக்கு எதிராக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் எதுவும் இதுவரை இல்லாததால், தடுப்பூசிகளின் செயல்திறனைக் கண்டறியும் மருத்துவப் பரிசோதனைகளும் இவற்றுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உகாண்டா எல்லையை ஒட்டியுள்ள இத்துரி மாகாணத்திலேயே இந்த நோய் பரவல் அதிகளவில் பதிவாகியுள்ளது.

இதுவரை 5,713 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 2,744 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பற்ற சூழல், மக்கள் இடம்பெயர்வு மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் வேலைநிறுத்தம் என்பன நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சவாலாக அமைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top