News

நேபாளம் பெருவெள்ளம்: தோண்டத் தோண்ட கிடைக்கும் சடலங்களால் அதிர்ச்சி.. பலி எண்ணிக்கை 1,127ஆக அதிகரிப்பு

 

நேபாள   பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,127ஆக அதிகரித்துள்ளது.

திபெத்தின் இமயமலை பகுதியில் கடந்த 26-ந்தேதி பனிச்சரிவு காரணமாக போடே கோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு உண்டானது. இந்த வெள்ளம், நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களை தாக்கியது. பாறைகள் மண், சேறு-சகதிகளுடன் சீறிப்பாய்ந்து வந்த வெள்ளம் பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. சுற்றுலா பயணிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

நேபாளத்தில் 2-வது வாரமாக மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதேபோல் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட உடல்களை நேபாள ராணுவத்தினர் படகுகளில் சென்று மீட்டு வருகிறார்கள்.

நேற்று காலை நுவாகோட்டின் பெத்ராபதி பகுதியில் சேற்றில் புதையுண்ட ஒரு வீட்டில் இருந்து 23 பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டனர். அதே போல் பல வீடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் இந்த பேரிடருக்கு 903 பேர் பலியாகி இருந்தநிலையில் நேற்று மட்டும் 100 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டுள்ளநிலையில், நேபாள பேரிடர் பலி எண்ணிக்கை 1,127 ஆக அதிகரித்துள்ளது.

போடே கோஷி மற்றும் திரிசூலி நதிப்படுகைகளில் உள்ள 11 நீர்மின் திட்டப் பகுதிகளில் பணியாற்றிய 894 பேரின் கதி என்ன என்பது இன்னும் தெரியவில்லை. இவர்களில் சுமார் 500 பேர் சுரங்கங்களில் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களை மீட்கும் பணிகளில் பேரிடர் மீட்புத்துறையினர் சுரங்கங்களுள் களம் இறங்கி உள்ளனர்.

தோண்டத் தோண்ட கிடைக்கும் சடலங்களால் அதிர்ச்சி நிலவும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

நேபாள தேசிய பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் மேலாண்மை முகமை தகவலின்படி, 583 வெளிநாட்டினர் உள்பட சுமார் 4 ஆயிரம் பேர் மாயமாகியுள்ளனர். இதுவரை 12 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் 21,300-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினரும், ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

 

 

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top