மாவீரர் வாரத்தின் மூன்றாம் நாளான நேற்று(23.11.2026) யாழ்ப்பாணம் – சுன்னாகம் ஐயனார் கோவிலடியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் உணர்வுபூர்வமான முறையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டுப் பருத்தித்துறை நகரில் மாவீரர் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
பருத்தித்துறை நகர சபையின் ஏற்பாட்டில் நகரின் மத்தியில் விசேட பந்தல் அமைக்கப்பட்டு, சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இ ன்று(23.11.2026) மாலை 6.00 மணியளவில் மாவீரர் ஒருவரின் தாயார் மாவீரர் நினைவுப் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார். இதனைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்று, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி. வேந்தன், நகர சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு வல்வெட்டித்துறையில் உணர்வுபூர்வமான முறையில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை நகர சபைக் கட்டடத் தொகுதியிலுள்ள மரக்கறிச் சந்தைக்கு மேல் மண்டபத்தில் நேற்று(23) இந்த நிகழ்வு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எங்கள் இனத்தின் சுதந்திர மூச்சுக்காகத் தம்மூச்சை மண்ணுக்குள் அடக்கிய மாவீரர் தெய்வங்களைப் பெற்றெடுத்த தெய்வங்களைக் கௌரவிப்போம்” என்ற தொனிப்பொருளில் வல்வெட்டித்துறை மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை மாவீரர் பணிமனையின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் வல்வெட்டித்துறை நகரபிதாவுமான இராமச்சந்திரன் சுரேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வல்வெட்டித்துறைப் பகுதியில் உள்ள மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிக்கப்பட்டுள்ளனர்.
வல்வெட்டித்துறை பேருந்து நிலையத்திலிருந்து மாவீரர் பொதுத் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்துச் சுடரேற்றியதைத் தொடர்ந்து, மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மங்கல வாத்திய மரியாதையுடன் ஊர்வலமாக நிகழ்விடத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மாவீரர் மேஜர் அலையழகியின் தந்தை சுந்தரலிங்கம் ஈகைச்சுடரை ஏற்றியதைத் தொடர்ந்து, மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரால் மாவீரர் நினைவு ஈகைச்சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மலர் வணக்கம் செய்யப்பட்டு அகவணக்கம் இடம்பெற்றுள்ளன. வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து தலைமை உரை இடம்பெற்று, மாவீரர் நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், வல்வெட்டித்துறை பிரதேசத்துக்குட்பட்ட மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர், வல்வெட்டித்துறை முன்னாள் நகரபிதா அனந்தராஜ், நகர சபை உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசிய ஆர்வலர்கள் எனப் பலரும் பங்கேற்றுள்ளனர்.
மாவீரர் வாரத்தை முன்னிட்டுக் கிளிநொச்சி, கோணாவில் வட்டாரத்தின் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நேற்று(23.11.2026) உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோணாவில் வட்டாரக் கிளையினரால் இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம்- கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் கலந்துகொண்டிருந்தார்.
மாவீரர் வாரத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில், தமது பிள்ளைகளை இழந்த மாவீரர்களின் பெற்றோர் மற்றும் குடும்ப உரித்துடையோருக்கு மதிப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
