“நாட்டை அழித்து, நாட்டை வங்குரோத்தடையச் செய்து, இந்நாட்டின் சாதாரண மக்களின் வாழ்க்கையை அழித்துவிட்ட பின்னரும் தேர்தலை ஒத்திவைக்க தற்போதைய அரசு முயற்சிக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஹப்புத்தளையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,தேர்தலைப் பிற்போட்டால் முழு நாடும் வீதியில் இறங்கி, கொழும்புக்கு வந்து இந்நாட்டு மக்கள் உரிமைகளை, மக்கள் இறையாண்மையை மக்கள் பலத்தின் ஊடாக வென்றெடுப்போம்.
சகலவற்றினதும் விலையும் உயர்ந்துள்ள இந்நேரத்தில், வட்டி விகிதங்கள் அதிகரித்து, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் கூட ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நேரத்தில் இருள் சூழ்ந்த தாய்நாட்டை மீட்க ஒன்றிணையுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.
வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை மீட்டு மீண்டும் 220 இலட்சம் மக்களும் பொருளாதார நன்மைகளை அனுபவிக்கும் நாட்டை உருவாக்குவேன்.
மக்கள் துயரத்தில் இருக்கும் நேரத்தில், மனச்சாட்சியற்ற யானை – காக்கை – மொட்டு அரசு சுகபோகங்களை அனுபவித்து வருகின்றது.
எனவே, அவர்களை விரட்டியடித்து அபிவிருத்தியை மையமாகக் கொண்ட பிரேமதாஸ அபிவிருத்தி யுகத்தை உருவாக்க ஒன்றிணையுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்”என கூறியுள்ளார்.