முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று(12.05.2026) கட்டைக்காட்டில் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு, அங்கிருந்தவர்கள் உட்பட வீதியில் சென்றவர்களுக்கும் கஞ்சி கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வை நினைவுப்படுத்தும் விதமாக வருடாந்தம் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் ஈழத்தமிழர்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
அதே போன்று, முள்ளிவாய்க்கால் கஞ்சும் காய்ச்சி அங்குள்ள மக்களுக்கு கொடுக்கப்படுகின்றது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17வது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்படி, நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு வருகிறது.

காணாமலாக்கப்பட்டோர்களின் உறவுகள் ஒரு பிரிவாகவும், தமிழ் தேசியப் பேரவையினர் ஒரு பகிர்வாகவும் இவ்வாறு முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற வலி நிறைந்த நினைவுகளை சுமந்தவாறு முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தியும் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணிக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு
தமிழினப்படுகொலை வாரத்தின் முதல் நாளான இன்று(12) முல்லைத்தீவு – முள்ளியவளை சந்தி, அம்மன் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலில் கடந்த 2009ஆம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட தாக்குதல்கள், பொருளாதார தடைகள், உணவு மற்றும் மருந்து என எதையுமே கிடைக்கவிடாது தடுத்து, உச்சக் கட்ட தாக்குதல்களை நடத்திய போது மக்களின் உயிர் காக்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வழங்கிய உப்புக் கஞ்சியே பலரின் உயிர் காக்கும் உணவாக மாறியிருந்தது.

இதனை விடவும் இந்த கஞ்சியை பெற்றுக் கொள்ள வரிசையில் நின்றவர்கள் மீது கூட திட்டமிட்டு அரசு நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வரலாற்று உண்மைகளை உலகுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் எடுத்துச் சொல்வதற்காகவே இந்த தமிழினப் படுகொலை வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன், “ஈழம் கவி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அகவம்” ஏற்பாட்டில் இந்த கஞ்சி பரிமாறும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன்போது, கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் ஞா.ஜீட்சன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.விஜிந்தன், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
தொண்டைமானாறு
இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் உண்டு உயிர் வாழ்ந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியினை நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு இன்று(12.05.2026) தமிழரசு கட்சியினால் தொண்டைமானாறு சன்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மே 12 தொடக்கம் 18 வரையான ஒரு வார காலப்பகுதியானது முள்ளிவாய்க்கால் வாரமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

யுத்தம் நிறைவடைந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையில் இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் கஞ்சியை மாத்திரம் குடித்து உயிர் வாழ்ந்த தமிழ் மக்கள் அதனை நினைவு கூறும் முகமாக வருடம் தோறும் கஞ்சி சமைத்து அனைவருக்கும் கொடுத்து பகிர்ந்து உண்ணும் வழக்கம் வடக்கு, கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் ஆரம்ப நிகழ்வு இன்று(12) சன்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதன்போது அதிகளவான மக்கள் கலந்து கொண்டு சிரட்டையில் கஞ்சி வாங்கி உண்டு இறுதி யுத்த முள்ளிவாய்க்கால் நினைவை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பிரதேச உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலய முன்றலில் மற்றும் கனகபுரம் வீதியில் வாகன வாடகை உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு இன்று(11.05.2026)காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம்(12.05.2026) மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு, வருகைத்தந்த அனைவருக்கும் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர் வை.தினேஸ் உள்ளிட்ட மாநகரசபை உறுப்பினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு – கள்ளப்பாடு
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் நினைவேந்தல் வாரம் இன்று(12.05.2026) முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்டுள்ளது.

அந்தவகையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் குறித்த மக்கள் தொடர்பகத்தில் கறுப்பு, வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நினைவு கூரப்பட்டதுடன், ரவிகரனால் பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நினைவுகூரல் நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா கலந்து கொண்டிருந்ததுடன், பெருந்திரளான பொதுமக்களும் உணர்வுபூர்வமாகப் பங்கேற்றிருந்தனர்.

யாழ்.பல்கலைக்கழகம்
முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து முன்னெடுப்பப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்நல் வாரம் இன்று(12.05.2026) வல்வெட்டித்துறை, ஆலடியில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் முள்ளிவாயக்கால் நினைவுக் கஞ்சியும் காய்ச்சி பரிமாறப்பட்டுள்ளது.
இதன் போது, யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் வேண்டுகோள் ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவு நாளான மே- 18 அன்று அனைத்து வீடுகள், மத வழிபாட்டுத்தளங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் அனைத்திலும் சுடறேற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்து கொண்டு தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மன்னார்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று(12.05.2026) மன்னாரில் நினைவு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்தடி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றள்ளது.

இதன் போது, முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு அங்கிருந்தவர்கள் உட்பட வீதியில் சென்றவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் போது, மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வை நினைவுபடுத்தும் விதமாக வருடாந்தம் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் ஈழத்தமிழர்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

அதே போன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி அங்குள்ள மக்களுக்கு கொடுக்கப்படுகிறது.
நல்லூர்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17வது ஆண்டு நினைவேந்தல் வாரமானது இன்றையதினம்912.05.2026) ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது நினைவு ஊர்தியில் உள்ள நினைவுச் சின்னத்துக்கு மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிரைவேந்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அந்தக் கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், தமிழ் தேசிய உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
பருத்தித்துறை
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் முதல் நாள் இன்று(12.05.2026) நினைவாக ஜனநாயக போராளிகள் கட்சியினரால் பருத்தித்துறை நகரில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பருத்தித்துறை நவீன சந்தை தொகுதியில் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெ.ஜெயகோபி தலைமையில் மதியம் 12:00 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இறுதி யுத்ததித்தில் மக்கள் பருக்கிய உப்புக் கஞ்சி பரிமாறப்பட்டுள்ளது.
இதில் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்களான கிருஷ்ணகோபால் கலைச்செல்வன், அகஸ்டின், முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் நாகர்கோவில் குட்டி, பருத்தித்துறை நகர சபை உறுப்பினர்களான ஜெயானந்தம் ஜெயகோபி, ஸ்ரீக்கண்ணன் ஸ்ரீபிரகாஷ் , அரசியல் பிரதிநிதிகள், வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
வவுனியா
மே 18 முள்ளிவாய்கால் வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வவுனியாவில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா- இலுப்பையடிப் பகுதியில் இன்று (12.05.2026) காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சியினைப் வழங்கி வைத்திருந்துள்ளனர்.

இறுதிப் போரின் போது உணவின்றி தவித்த மக்களுக்கு கஞ்சி எவ்வாறு உயிர் காக்கும் மருந்தாக அமைந்தது என்பதையும், அக்காலப்பகுதியில் மக்கள் அனுபவித்த சொல்லொணாத் துயரங்களையும் நினைவுபடுத்தும் வகையில் குறித்த நிகழ்வு அமைந்திருந்தது.

யாழ்ப்பாணம்
இந்த நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு உணர்வுபூர்வமாக கஞ்சியினை அருந்திச் சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது.
தமிழின அழிப்பு நாள் மே 18 ஐ முன்னிட்டு, முள்ளிவாய்க்கால் தமிழ் இனவழிப்பின் நினைவை சுமந்த ஊர்திப் பவனி இன்று(12.05.2026) காலை யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலியில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில் கருப்பு கொடிகள், நினைவு பதாகைகள் மற்றும் தமிழர் தேசிய உணர்வுகளை பிரதிபலிக்கும் வாசகங்கள் ஏந்தப்பட்டிருந்தன.
மேலும் உயிரிழந்த மக்களுக்காக அகவணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது. தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்திலிருந்து காலை 9.00 மணியளவில் ஆரம்பமான இந்த ஊர்திப் பவனியில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
வல்வெட்டித்துறை
முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூரும் “முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்”, யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினால் இன்று(12.05.2026) வல்வெட்டித்துறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை, ஆலடிப் பகுதியில் ஒன்றுகூடிய மாணவர்கள், போரில் உயிரிழந்த மக்களுக்காகச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியள்ளனர்.

இவர்களுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்து கண்ணீர் மல்கத் தமது அஞ்சலிகளைச் செலுத்தியுள்ளனர்.
இறுதிப் போரின் அவலங்களை நினைவுகூரும் வகையில், மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு அங்கிருந்த பொதுமக்களுக்குப் பரிமாறப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறான கஞ்சி வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக மாணவர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.
நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விடுத்துள்ள விசேட வேண்டுகோளில், “எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி, தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்க வேண்டும்.
அன்றைய தினம் அனைத்து வீடுகள், வர்த்தக நிலையங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் மத வழிபாட்டுத்தளங்களில் சுடரேற்றி உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – வன்னிச்சி அம்மன் ஆலயம்
முள்ளிவாய்க்கால் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று(12) கம்பர்மலை இளைஞர்களின் ஏற்பாட்டில் வன்னிச்சி அம்மன் ஆலயத்தில் உயிரிழந்த மக்களுக்காக ஆத்மா சாந்தி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், கம்பர் மலை சந்தியில் அமைந்துள்ள முதல் மாவீரர் சங்கர் நினைவுத்தூபியில் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் கம்பர்மலை இளைஞர்களால் வழங்கப்பட்டுள்ளது.


